தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
கல்வியில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், ஏழை மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஐந்தாண்டுக்கு முன் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இப்பள்ளியை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றனர். ஆரம்பத்தில், இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சில வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு, பள்ளி வகுப்புகள் நடந்து வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் இப்பள்ளிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் கூடிய வகுப்பறை கட்டிடங்கள் தர்மபுரி அடுத்த செட்டிக்கரையில், 13 கோடி ரூபாயில், 8.5 ஏக்கரில் பள்ளி கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ், 1 வரை வகுப்புக்கள் நடந்து வருகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 625 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி இருக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்தனர்.
ஆனால், இப்பள்ளியில் தொடர்ந்து ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதில், சிக்கல் இருந்து வருகிறது. பள்ளி துவங்கியது முதல் இதே நிலை நீடித்து வருகிறது.
இப்பள்ளியில், 31 ஆசிரியர் பணியிடங்கள் உள்ள நிலையில், ஏழு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பத்து ஆசிரியர் பணியிடங்களும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று ஆசிரியர் பணியிடங்கள், மூன்று ஆய்வக தொழில் நுட்ப ஊழியர்கள், நூலகர் உள்ளிட்ட, 24 பணியிடங்கள் காலியாக உள்ளது.
அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்த போதும், போதிய ஆசிரியர்கள் இல்லாததால், ஆண்டுக்கு, ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, ஒவ்வொரு கல்வியாண்டிலும் பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு இடம் பெயர்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி கொடுக்க நினைத்த போதும், மத்திய அரசு பெயருக்கு பள்ளியை திறந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக, பத்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மத்திய அரசின் பாட திட்டங்களுக்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
மாணவர்களின் நலன் கருதி உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை நீடித்தால், வரும் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதோடு, வரும் ஆண்டில் ப்ளஸ் 2 தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்காத நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.