கம்பம் அருகே வகுப்பறையில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோட்டை மைதானத்திற்குள் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 59 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பாக ஆய்வு செய்துகொண்டு வந்தார். எட்டாம் வகுப்பிற்கு வந்தபோது அங்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்களிடம் கேட்டார்.
அவர் பாத்ரூம் சென்றிருப்பதாக தெரிவித்தனர். அந்த நேரத்தில் ஆசிரியரும் வந்துவிட்டார்.
அப்போது தலைமை ஆசிரியர் அவரிடம் வகுப்பு நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள் என்று சத்தம் போட்டார். இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியரை கன்னத்தில் அறைந்தார். இதனை அடுத்து 8-ம் வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரை பதிலுக்கு அறைந்தார். பின்னர் இருவரும் வகுப்பறையிலேயே கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதை பார்த்ததும் மற்ற ஆசிரியர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
பின்னர் இதுகுறித்து பள்ளி நிர்வாகிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். 2 பேரும் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் என்பதால் இந்த பிரச்சினை வெளியே வராமல் அவர்களுக்குள்ளேயே பேசி முடிக்கப்பட்டது. இதே வேறு கூட்டணியை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் பிரச்சினை பெரிதாக வெடித்திருக்கும்.
இந்த சம்பவம் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறையில் தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் அநாகரீகமாக நடந்துகொண்ட செயல் மாணவ, மாணவிகளிடமும், பின் ஆசிரியர்களிடமும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Posting problem...! Arasiyalla idhellam saadhaaranamappa....!!
ReplyDelete