Pages

Monday, August 26, 2013

மதிய உணவுக்கு ஒதுக்கப்படும் நிதி: பார்லிமென்ட் குழு விமர்சனம்

 "குடி தண்ணீர் பாட்டில் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல” என பார்லிமென்ட் குழு விமர்சித்துள்ளது.

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில், ஜூலை 16ம் தேதி, மதிய உணவு சாப்பிட்ட, மாணவ, மாணவியர், 23 பேர், பரிதாபமாக இறந்தனர். மதிய உணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில், விஷம் கலந்திருந்ததே, இதற்கு காரணம் என, விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், மகளிருக்கு அதிகாரம் அளிக்கும், பார்லிமென்ட் குழு, லோக்சபாவுக்கு அளித்துள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடிநீர் பாட்டிலின் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, மதிய உணவு திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு, உணவு வழங்க, 3.11 முதல் 4.65 ரூபாய் வரை, மத்திய அரசு ஒதுக்குவது, நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்குவதற்காக, கொடுக்கப்படும் தொகையானது, சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அத்துடன், உணவின் கலோரி அளவு, தயாரிக்கும் விதம் போன்றவற்றிலும், அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில், பள்ளிக் கல்வித் துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் என, பல அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தும், பீகாரில், நடந்த துயர சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மதிய உணவுத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க, அமைக்கப்பட்ட குழு, தன் பணியை திறம்பட செய்யாததே, இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற காரணம்.

எனவே, அந்தக் குழுக்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், மதிய உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். இவ்வாறு பார்லிமென்ட் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.