Pages

Thursday, July 18, 2013

புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!

ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான் என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் அளிக்கப்படுகிறது. புதிய பாட திட்டமான தொடர் மதிப்பீட்டு முறை மூலமாக மாணவர்களுக்கு எந்த வகையில் பாடம் நடத்த வேண்டும். மாணவர்களின் திறனை வளர்த்தல் போன்றவற்றிற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற விதத்தில் தற்போது பாடமுறைகள் வந்துள்ளது. அதற்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களின் திறனை வளர்த்து அதன்மூலம் மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் தெரிவித்த விபரம் வருமாறு: தமிழக அரசு கல்வித்துறையில் புதிய முயற்சியாகவும், மேலை நாடுகளில் பின்பற்றக்கூடிய முறையாகவும் கருதப்படும் தொடர் மதிப்பீடு முறையை முழுமையாக ஆய்வு செய்தும், ஆலோசித்த பிறகும் கடந்த ஆண்டு இந்த முறை தமிழகத்தில் கொண்டு வரப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஆசிரியர்கள் அரசின் புதிய முறைக்கு வரவேற்பு தெரிவித்து பயிற்சியை பெற்று மாணவர்களுக்கு அதனை கற்பித்து வருகின்றனர்.

இந்த முறையில் மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்றைய சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு ஏற்ற கல்வி எது என்பது குறித்தும், மாணவர்களுக்கு கிரியேட்டிவ் திங்கிங் (படைப்பாற்றல் திறன்) வளர்த்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு இருந்த முக்கியம் போய் மாணவர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டம் உள்ளது.

முன்பு ஆசிரியர்கள் கற்பிப்பவராக இருந்தார். ஆனால் தற்போதைய திட்டத்தில் ஆசிரியர் என்பது மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டிதான். மாணவர்களின் திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு அரசு திறன் வளர் பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியை ஆசிரியர்கள் நல்ல முறையில் பெற்று மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு கருத்தாளர்கள் பேசினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.