Pages

Monday, July 15, 2013

பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின் இணைப்பு: ஊழியர்கள் அலட்சியம்

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மின்கம்பம் உடைந்து, பல மாதங்கள் ஆகியும், புதிய மின்கம்பம் பொருத்தப்படவில்லை. பள்ளியின் மின் இணைப்பு கம்பி, ஆபத்தான நிலையில் தொங்கிய படி உள்ளது.
 
ஆர்.கே. பேட்டை, பொன்னியம்மன் கோவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அண்ணா நகரில் செயல்படுகிறது. இப்பள்ளியில், 75 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள மின்கம்பத்தில் இருந்து, பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், இந்த மின்கம்பம் உடைந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றாமல், மெத்தனமாக செயல்படுகின்றனர். மேலும், புதிய மின்கம்பமும் அமைக்கவில்லை.

மின்கம்பத்திற்கும், கட்டடத்திற்கும் இடையே உள்ள மின் இணைப்பு கம்பி, தொய்வாக இல்லாதபடி இழுத்து பிடிக்க, அதற்கு இணையாக இரும்பு கம்பி வைத்து, கம்பத்தில் கட்டி வைக்கப்படும். தற்போது, கம்பம் இல்லாத நிலையில், மின் இணைப்பு உறுதியாக அமையாது.

பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பம் உடைந்துள்ளதால், உறுதியற்ற மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்கம்பி இணைப்பில் இருந்து துண்டிக்கப்படும் நிலையுள்ளது. தற்செயலாக, மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால், மாணவர்கள் விபத்திற்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். புதிய மின்கம்பம் பொருத்த வேண்டும் என, பெற்றோர்-ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள், பலமுறை கோரிக்கை வைத்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மின்கம்பங்கள் போதிய அள விற்கு இருப்பு இல்லை. விரைவில் புதிய மின்கம்பம் நிறுவப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.