Pages

Saturday, July 27, 2013

ஊதிய உயர்வில் புறக்கணிப்பு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் ஊதியக்குழு பரிந்துரையின்
அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என கூறப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

காளையார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ்அமலநாதன் ஆகியோர் கூறுகையில், ‘கடந்த 2009ம் ஆண்டிலிருந்து ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் என போராடி வருகிறோம். 2010ல் ஒரு நபர் குழு பரிந்துரையிலும் இடைநிலை ஆசிரியர் புறக்கணிக்கப்பட்டனர். 2011 தேர்தல் வாக்குறுதிப்படி அமைக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள மூன்று நபர் குழு பரிந்துரையிலும் 60ஆயிரம் இடைநிலை ஆசிரியர் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது’ என்றனர்.

காரைக்குடி: இடைநிலை ஆசிரியர் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிராகரித்த மூவர் குழுவை கண்டித்து, காரை க்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் குமார், நகர கிளை அமைப்பாளர் சாவித்திரி, முன்னாள் மாவட்ட தலைவர் காத்தமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் சம்பள உயர்வு, பங்கேற்பு ஓய்வூதியம் மற்றும் இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணி நியமன ஆணை திருத்தம் ஆகியவற்றை நிராகரித்த மூவர் குழுவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.