Pages

Tuesday, July 16, 2013

முன் மாதிரியாக செயல்பட்டு வரும் கோளூர் அரசு பள்ளி

பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் காலில் விழுந்து, ஆசீர்வாதம் பெற்று பள்ளிக்கு வரவேண்டும் என, அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறை, மாணவர்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 312 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி, மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும், தினமும் பள்ளிக்கு வரும் முன், பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வர வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. இதனால். மாணவர்களிடையே பெற்றோர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் புகார் மற்றும் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஒவ்வொரு வகுப்பறையின் நுழைவாயிலும், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் என, சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் சுமந்து, அவை மாணவர்களிடையே தினம் நினைவு கூர வழிவகை செய்கிறது.

வகுப்பறையின் வெளியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காலணிகள், குப்பை இல்லாத பள்ளி வளாகம், எப்போதும் தங்கு தடையின்றி இயங்கும் மின் விசிறி, மின் விளக்குகள் என, தனியார் பள்ளியை நினைவுபடுத்துகிறது.

இப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப்படை, இளஞ்செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம், சாதனைப் பூக்கள், செஞ்சுருள் படை என, அனைத்திலும், தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதன்மூலம், கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளனர்.

இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசு கூறியதாவது: "நான் பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்ததால், ஒவ்வொரு பள்ளியும் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனால், பள்ளியின் மாணவர்களிடையே ஒழுக்கத்தையும், சமூக அக்கறையும் கொண்டு வருவதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டு உள்ளேன்.

தினமும் மாணவர்கள் வாய்ப்பாடு ஒப்பிப்பது, ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பு மற்றும் அதன் தமிழாக்கம் தெரிந்து கொள்வது உள்ளிட்டவையும் அன்றாட நிகழ்வாகும்.  இங்கு பணியாற்றும் சக ஆசிரியர்கள் அனைவரும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணிப்பதால், எங்களுடைய செயல் மாணவர் களிடையே வரவேற்பை பெற்று உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.