Pages

Tuesday, July 2, 2013

தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்...

தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில்,""ஆரம்பப்பள்ளிகளில் நாம் கற்றுக்கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது. தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப்பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்,'' என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு' என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ' (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர். இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்' என்றனர்.

தாய்மொழியும் முக்கியம்:

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.