Pages

Tuesday, July 16, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் எவ்வித இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது - உயநீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் எவ்வித இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த கே.குமாரவேலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:


பஸ் விபத்தில் ஊனம்

எனது தந்தை விவசாயக் கூலி. 2009–ம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ படித்த நான் நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். 1992–ம் ஆண்டு ஒரு பஸ் விபத்தில் எனது வலது கால் துண்டிக்கப்பட்டது. எனக்கு 60 சதவீத ஊனம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக சுகாதார நலத்துறை சான்றிதழ் வழங்கி உள்ளது. அதற்கான ஒதுக்கீட்டின்படி நான் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன்.

3 சதவீத ஒதுக்கீடு

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.) எழுதி 83 மார்க் எடுத்தேன். (90 மதிப்பெண் எடுத்தால் பாஸ்). இந்த நிலையில் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை அளிப்பதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நானும் எனக்கு இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். அரசின் மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 360 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை அந்த இடஒதுக்கீட்டின்படி யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

முன்னுரிமை

ஆனால் 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் எனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் பிரிவுக்கு மனு கொடுத்தேன். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரையும் சந்தித்து மனு கொடுத்தேன். ஆனால் 90 மார்க் எடுத்தால் மட்டுமே பணி நியமனம் குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார். ஆனாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மற்றும் அரசாணை குறித்து நான் கேட்ட விளக்கங்களை அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனால் சமவாய்ப்பு அளிக்கும் அரசியல் சாசனம் மீறப்படுகிறது. எனவே நான் கொடுத்த விண்ணப்ப மனுவின் அடிப்படையில் எனக்கு மாற்றுத் திறனாளி அடிப்படையில் முன்னுரிமை அளித்து, பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

அரசின் வாதம் சரிதான்

3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதிக்கான மார்க்கில் சலுகை அளித்து தனக்கு இடைநிலை ஆசிரியர் பதவி வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அரசு வக்கீல் சஞ்சய் காந்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தகுதியில் யாரும் சலுகை கோர முடியாது. இது போட்டித் தேர்வு அல்ல. ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கு இணையான தேர்வு அது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்பட எந்த பிரிவினரும் பட்டயப்படிப்பில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி அடைய முடியும். அதுபோலத்தான் ஆசிரியர் தகுதித் தேர்விலும் குறைந்தபட்சம் 90 மார்க் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மனு தள்ளுபடி

90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு வேண்டுமானால், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோரலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு, குழந்தைகளுக்கு கல்வியை அளிக்கக்கூடிய ஆசிரியருக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு. அதில், 90 மார்க் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியாமல் செய்து விட்டது என்று கூற முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.