Pages

Thursday, July 18, 2013

அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்த அரசுக்கு பரிந்துரை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

அரசு பணிகளில் சேர திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ‘தந்தி’ டி.வி.க்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்வு ஏற்பாடுகள்

குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21–ந் தேதி நடைபெற உள்ளது. தேர்வு, வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.பதற்றம் நிறைந்த தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேர்வு நடைபெறுவது அனைத்தும் வீடியோவில் பதிவுசெய்யப்படும். அந்த வீடியோ காட்சியை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.

திருநங்கைகளுக்கு தனித்தேர்வு

தற்போது அரசு பணிகளுக்கான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஆணா? அல்லது பெண்ணா? என பாலினத்தை தெரிவிக்க வேண்டும். இத்தகைய சூழலில் திருநங்கைகள் தங்கள் பாலினத்தை குறிப்பிட முடியாத நிலை உள்ளது.திருநங்கைகளுக்கு தனித்தேர்வு நடத்தி அரசு பணிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வரப்பெற்றுள்ளது. அவர்களையும் அரசு பணியில் சேர்த்தாக வேண்டும். திருநங்கைகள் தங்கள் பாலினத்தை குறிப்பிடும் வகையில் உரிய ஏற்பாடு செய்யப்படும்.அதேபோல், அவர்கள் அரசு பணியில் சேரும் வண்ணம், அவர்களுக்கு தனித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினை நிச்சயம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் எடுத்துச்செல்லப்படும். அவரும் இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்வார்.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.