Pages

Monday, July 1, 2013

ஒரு வகுப்பில் 5 பிரிவுகளுக்கு மேல் உள்ளதா? 300 தனியார் பள்ளிகளில் ஆய்வுக்கு உத்தரவு

ஒரு வகுப்புக்கு 5 பிரிவுகளுக்கு மேல் நடத்தும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக படிக்கும் மாணவர்கள் விவரங்கள் குறித்து சர்வே நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
தமிழகத்தில் 15,650 தனியார் பள்ளிகள் உள்ளன. அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களும், 6 முதல் 10ம் வகுப்பு வரை 35 மாணவர்களும், 11, 12ம் வகுப்புகளில் 40 மாணவர்கள் வரை மட்டுமே சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பல தனியார் பள்ளிகள் ஒரு வகுப்பில் விதிகளை மீறி கூடுதல் மாணவர்களை சேர்த்து உள்ளதாகவும், இதனால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவதா கவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 5 பிரிவுகளுக்கு (செக்ஷன்) மேல் நடத்தக்கூடாது என்றும், ஆர்டிஇ விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டு இருந்தது.

மாணவர் சேர்க்கை முடிந்து, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த திடீர் உத்தரவால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சியை அடைந்துள்ளன. பல முன்னணி தனியார் பள்ளிகள், ஒரு வகுப்புக்கு 'ஏ' முதல் 'எல்' வரை 12 பிரிவுகள் நடத்தி வரும் நிலையில், கூடுதல் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் நந்தகுமார் கூறியது: போதிய கட்டிட வசதிகளும், ஆசிரியர்களும் இருந்தால் எத்தனை பிரிவுகள் வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் என்ற உத்தரவு தனியார் ஆங்கில வழி பள்ளிக்கு மட்டும் என்று சொல்லி இருப்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. சட்டம் என்பது பொதுவாக இருக்க வேண்டும்.

இதுகுறித்து மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் விதிகளுக்கு உட்பட்டு பிரிவுகளை குறைத்து இருக்கும். இப்போது திடீர் உத்தரவால் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படும். இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

மெட்ரிக் பள்ளி இயக்கக உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாநிலம் முழுவதும் 300 தனியார் பள்ளிகளில் கூடுதல் பிரிவுகள் இயங்குவது தெரிய வந்துள்ளது. இப்பள்ளிகளில், எத்தனை மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து சர்வே நடத்த, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்து அரசுதான் முடிவு செய்யும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.