Pages

Monday, July 1, 2013

இன்றிரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் விண்ணில் பாய்வதற்கு தயாராக உள்ள பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட்.கப்பல், விமானப் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பயன்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் திங்கள்கிழமை (ஜூலை 1) இரவு 11.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து இரவில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியப் பிராந்தியத்தில் போக்குவரத்துக்கு உதவும் வகையில் 7 செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பு நிறுவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் அமைப்பின் முதல் செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது.

போக்குவரத்துக்காக இந்தியாவின் சார்பில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் (நேவிகேஷன் சாட்டிலைட்) இது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 1,425 கிலோ எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள் புவி சுற்று வட்டப் பாதையில் இறுதியாக நிலைநிறுத்தப்படும். இந்தச் செயற்கைக்கோள்களின் மூலம் இந்தியப் பகுதிகளிலும், இந்திய எல்லையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் வரை ஆகாயம், நீர், தரை வழியில் பயணிக்கும் இடங்களை துல்லியமாக அறிந்துகொள்ளலாம். போக்குவரத்துத் தகவல்களை வழங்குவதோடு, ரகசியத் தகவல்களையும் இந்தச் செயற்கைக்கோள் வழங்கும்.

முதற்கட்டமாக, இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 20,650 கிலோ மீட்டர் தொலைவும், குறைந்தபட்சமாக 284 கிலோ மீட்டர் தொலைவும் உள்ள நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு, புவி சுற்றுப்பாதைக்கு இணையாக நிலைநிறுத்தப்படும்.

இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

இதனிடையே, ராக்கெட்டை ஏவுவதற்காக 64.5 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை காலை 7.11 மணிக்குத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, ராக்கெட்டில் எரிபொருள்கள் நிரப்பப்பட்டு ஏவுவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதேபோல், ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் வானிலை நன்றாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தள்ளிவைப்பு: பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட் ஜூன் 12-ஆம் தேதியே விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் உள்ள எலெக்டோரோ-ஹைட்ரோலிக் கன்ட்ரோலில் சிறிய பிரச்னை கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் ஏவும் தேதி ஜூலை 1-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.