Pages

Friday, July 19, 2013

கமிஷன் கொடுத்தால் பாடப் புத்தகம்: பிளஸ் 1 மாணவர்கள் அவதி - நாளிதழ் செய்தி

தமிழ்நாடு பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்கள் கேட்கும் கமிஷன் விவகாரத்தால், பள்ளி துவங்கி ஒரு மாதமாகியும், தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 மாணவர்கள், பாடப் புத்தகமின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை, பதிப்பாளர்களிடம், மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் நேரடியாக கொள்முதல் செய்து, வழங்கி வந்தன. சமச்சீர் கல்வி அறிமுகமான பிறகு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திடம் புத்தகம் வாங்க வேண்டியுள்ளது.

பாடப் புத்தகம் வாங்கும், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு, போக்குவரத்து செலவாக, கொள்முதல் செய்யும் புத்தகங்களின் மொத்த தொகையில், 5 சதவீதம், புத்தக விற்பனை நிலையங்களுக்கு, 9.5 சதவீதம் தள்ளுபடியை, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்குகிறது.

தனியார் பள்ளி நிர்வாகிகள், தாங்கள் கொள்முதல் செய்யும் புத்தகங்களின் மொத்த தொகையில், 5 சதவீதம் போக, மீதித் தொகையை, வரைவோலையாக எடுத்து, தங்களுக்கு அருகிலுள்ள, தமிழ்நாடு பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்களிடம் கொடுத்து, புத்தகங்களை பெற்றுச் செல்வர்.

அதன்படி, கடந்த மாத இறுதியிலேயே, தனியார் பள்ளி நிர்வாகிகள் வரைவோலை கொடுத்தும், பாடநூல் கழக குடோன் பொறுப்பாளர்கள், 4.5 சதவீதத் தொகையை கமிஷனாகக் கொடுத்தால் மட்டுமே, புத்தகம் வழங்க முடியும் எனக் கூறி, புத்தகத்தை வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. இதனால், தனியார் பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், பள்ளி திறந்து ஒரு மாதமாகியும், பாடப் புத்தகமின்றி சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.