Pages

Monday, June 24, 2013

பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளிதழ் செய்தி

பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளிகள் இயக்கப்படும், 9:30 மணிக்கு, அரசு, தனியார் அலுவலகங்களும் செயல்படத் துவங்குகின்றன. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களைத் தவிர, அரசு பேருந்துகளில், சொந்த வாகனங்களில் செல்லும் மாணவர்கள், இதனால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் போதுமான அளவு இல்லாத நிலையில், வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் மாணவர்கள் சிக்கி, உரிய நேரத்தில் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், "ஷிப்ட்" அடிப்படையில் பள்ளிகளை இயக்கலாமா? என்ற, ஆலோசனையும் இருந்தது. சில தனியார் பள்ளிகள், இம்முறையை பின்பற்றியும் வருகின்றன.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன், பஸ் நேரத்திற்கு வராததால், பால் வேனில் சென்ற மாணவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு, பள்ளி நேரத்தை மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதன்படி, இன்று முதல், காலை, 9:30 மணிக்கு பதில், 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும் என்றும், மாலை, 4:30 மணிக்கு பதில், 4:15 மணிக்கு முடியும் என்றும், 2013-14ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், "பள்ளி நேரத்தில் மாற்றமில்லை" என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு, போதிய உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீதி போதனை, உடல்நலம், வாழ்க்கை, சுற்றுச்சூழல் கல்விகள், முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள், இன்றைய காலகட்டத்தில், மாணவ, மாணவியருக்கு அவசியம். மேலும், பள்ளி செயல்பாடுகள், மாணவர்களுக்கு முழுமையான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழக அரசு, கடந்தாண்டு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில், காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்பட வேண்டிய முறை, தியானம், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மதிய இடைவேளைக்குப் பின், வாய்ப்பாடு சொல்லுதல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டு எழுதுதல் மற்றும் வெள்ளிக்கிழமை, இறுதி வகுப்பில், மாணவர்களின் தனித்திறன் செயல்பாடுகள் போன்றவை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்த, பாடவேளை நேரங்களில் மாற்றம் வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கூறியதன் பேரில், அவர்களை கொண்டு ஒரு குழு அமைத்து, பாடவேளைகள் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்காக மாதிரி பாட கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.இதேபோல், பாடவேளை நேரங்களை, பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்திற்கு உட்பட்டு, மாற்றி அமைத்துக் கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பாட கால அட்டவணையில் மட்டுமே, மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே, பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறானது. பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் ஆகியவற்றில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பள்ளிகள் வழக்கமாக, தற்போது செயல்படும் நேரங்களிலேயே செயல்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பள்ளி துவங்கும், முடியும் நேரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால், நாள்காட்டி தகவலும், இந்த அறிவிப்பும் மாணவர்களை குழப்பமடைய செய்யும் வகையில் உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.