Pages

Monday, June 17, 2013

முப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை திறன்

பள்ளி பாடங்களுக்கு நோட்ஸ்கள் வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது. பாடச்சுமையை குறைக்க, 2012 முதல் முப்பருவ கல்வி, தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது 1 முதல் 8 ம் வகுப்பு நடைமுறையில் உள்ளது. இவ்வாண்டு முதல் 9ம் வகுப்பிற்கும் இம்முறை விரிவுபடுத்தப்பட்டது.
இதற்காக, முப்பருவ புத்தகங்களை வழங்குகின்றனர். வளரறி (செய்முறை), தொகுத்தறி(எழுத்து) என, இரு தேர்வு நடத்தப்படும். தொகுத்தறிவிற்கு 60 மதிப்பெண்ணும், வளரறிவிற்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

வகுப்பறையில் ஒவ்வொரு பாடத்திலும், மாணவர்களின் அறிவு, அடைவுத்திறனை சோதித்தல், குழு விவாதம், தனித்திறன், பாடத்தில் இடம் பெறும் கதா பாத்திரத்தில் நடிக்கச் செய்தல், பாடலாக படிக்கச் செய்தல் போன்ற பல்வேறு தனித்திறனை சோதித்து, மதிப்பெண் அளிக்கப்படுகிறது.

மாணவர்கள், ஆசிரியர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் நோக்கில், இப்புதிய முறை கொண்டு வரப்பட்டது. தற்போது, ஆசிரியர்களின் மூளையை மழுங்கடிக்கும் செயலாக, வளரறி தேர்வுக்கும், கடைகளில் "நோட்ஸ்கள்" கிடைக்கின்றன. கற்பனை திறன் இன்றி ஆசிரியர்களும்,நோட்ஸ்களில் இடம் பெற்றுள்ள கேள்வி, செயல்முறைகளை மட்டும் தேர்வில் கேட்கின்றனர்.

இதனால் பழைய முறைப்படி மனப்பாடம் செய்யும் நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்படுகின்றனர் என சில கல்வியாளர்கள் கருத்து கூறுகின்றனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறுகையில், "வளரறி தேர்வுக்கு நோட்ஸ் தயாரிப்பதன் மூலம், தனியார் விற்பனை நிறுவனங்கள், அரசின் பாடக்கொள்கையை,குறுக்கு வழியில் தவறாக பயன்படுத்த வழிவகை செய்கின்றன. இது போன்ற மாதிரி "நோட்ஸ்"களை பறிமுதல் செய்ய வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.