Pages

Sunday, June 16, 2013

வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்

ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வின் போது ஏற்படும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், விருதுநகர் மாவட்டம், 95.87 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றது. வட மாவட்டங்களான வேலூர், 81.13 சதவீதம், விழுப்புரம், 78.03, அரியலூர், 74.94, கடலூர், 73.21, திருவண்ணாமலை மாவட்டம், 69.91 சதவீதம் பெற்று, முறையே கடைசி ஐந்து இடங்களைப் பிடித்தன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கன்னியாகுமரி மாவட்டம், 97.29 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. தூத்துக்குடி 95.42 சதவீதத்துடன் இரண்டாமிடமும், ஈரோடு 95.36, திருச்சி 95.14 சதவீதத்துடன் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்தன.

அரியலூர், 82.41, விழுப்புரம், 81.99, நாகை, 79.53, திருவண்ணாமலை, 78.09, கடலூர் மாவட்டம், 75.25 முறையே கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. பிளஸ் 2, 10ம் வகுப்பு இரண்டிலுமே, வட மாவட்டங்கள் தொடர்ந்து தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கியே வருகின்றன.

இந்த மாவட்டங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிப்பொறியியல் உள்ளிட்ட பிரதான பாடங்களுக்கான, ஆசிரியர்கள் பற்றாக்குறை, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் பற்றாக்குறைகளைத் தீர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்கிறது.

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட, மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் குறைவாக இருந்தனர். தகுதித் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அவர்கள் அடுத்த கல்வியாண்டில் நடக்கும் இடமாறுதல் கலந்தாய்வில், தங்கள் சொந்த மாவட்டங்களுக்குச் சென்று விடுவதால், வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால், மாணவர்கள் இயற்பியல், உயிரியல், வேதியியல், கணக்கு பாடங்களில் மட்டுமல்ல மொழிப் பாடங்களிலும், தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவதோடு, சொற்ப மதிப்பெண்களில் தேர்ச்சி பெறுவதால், பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட, உயர் கல்வியில் சேர முடியாமல், வட மாவட்ட மாணவர்கள் ஏமாற்றத்தை சந்திக்கின்றனர்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட தேசிய தரம் வாய்ந்த உயர் கல்வி நிலையங்களை, நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. எங்கள் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 5ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.