Pages

Monday, June 17, 2013

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம், ஐ.இ.எஸ்., தேர்வு நடத்த வேண்டும்

"மத்திய அரசு, ஐ.இ.எஸ்., (இந்தியன் எஜூகேசனல் சர்வீஸ்) தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களை, கல்வித்துறையில், கல்வி இயக்குனர்களாக நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில், நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பழனிப்பன் வரவேற்றார். நிர்வாகிகள் செல்வராஜ், தங்கமணி, முருகேசன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் முத்துசாமி, கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., தேர்வுகளை போல், ஐ.இ.எஸ்., (இந்தியன் எஜூகேசனல் சர்வீஸ்) தேர்வு நடத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களை, கல்வித்துறையில், மாநில, மத்திய அரசுகளில் கல்வி இயக்குனர்களாக நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக் கட்டிடங்களை கட்டும் பணியை, தலைமையாசிரியர்கள் செய்வதால், பள்ளியில், மாணவர்களின் கல்வி போதனை பாதிக்கப்படுகிறது. அதை நீக்கி, கட்டிடம் கட்டும் பணியை, யூனியன்களுக்கு வழங்கி, மாணவர்களின் கல்வி போதனையை வளர்க்க வேண்டும்.மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ள பயிற்சிப்பள்ளி, பயிற்சிக் கல்லூரிகளில், தகுதி அடிப்படையில் சேர்ந்து, முறையாக ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்து, தமிழக அரசு, பல்கலை நடத்தும் தேர்வில் தேறிய பின், ஆசிரியர் பயிற்சிப் பட்டயமும், பயிற்சிப் பட்டமும் பெற்று வெளிவந்துள்ளனர்.
அவர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது, தமிழக அரசு வழங்கிய பட்டயத்தையும், பட்டத்தையும் தகுதியற்றது என, தமிழக அரசே கூறுவதாக உள்ளது. ஆகவே, தமிழக அரசு, இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்விக் கற்பிக்க, ஆங்கில வழி இணைப்பிரிவுகள் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.இ.இ.ஓ., டி.இ.இ.ஓ., அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட அலுவலர் பதவிகள், ஆயிரக்ணக்கில் நியமனம் செய்யாமல் காலியாக உள்ளன. அதனால், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணிகளுக்கு முறையில்லாமல் பயன்படுத்துவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஊழியர்களை நியமனம் செய்து, மாணவர்களின் கல்வியை பாதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.