Pages

Wednesday, June 19, 2013

பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை

"அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரண்யா தாக்கல் செய்த மனு: நான் எறிபந்து விளையாட்டு போட்டியில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். இவ்விளையாட்டை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ளன. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில், 730 மதிப்பெண் என்ற தகுதியை எட்டியுள்ளேன்.

சென்னை அண்ணா பல்கலையில், ஜூன் 14 ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. எனது உண்மை சான்றிதழ்களை சமர்ப்பித்தேன். ஆனால், பல்கலை, ஜூன் 16 ல், வெளியிட்ட விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், எனது பெயர் இல்லை. என்னை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கவும், புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சண்முக ராஜா சேதுபதி ஆஜரானார். பல்கலை வக்கீல், "மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் அங்கீகாரத்தை, இந்திய எறிபந்து கூட்டமைப்பு பெறவில்லை. இதனால், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை" என்றார்.

நீதிபதி, "மனுதாரரை கவுன்சிலிங்கில் பங்கேற்க, பல்கலை அனுமதிக்க வேண்டும். மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விளையாட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் முடிவை வெளியிடாமல், நிறுத்தி வைக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.