Pages

Saturday, June 1, 2013

கல்லூரி ஆசிரியரான காவலர்

"சல்யூட்" அடித்து 20 ஆண்டுகள் பழக்கப்பட்டு போன கைகள், இனி இரு கைகளையும் கூப்பி "வணக்கம்" வைக்க போகிறது. ரோந்து சென்ற பூட்ஸ் கால்கள், இனி கரும்பலகை மேடையில் அங்கும், இங்குமாய் நடை போட போகிறது.
இந்த மாற்றங்களுக்கு சொந்தக்காரர் போலீஸ் ஏட்டு ஆறுமுகம், 41. மதுரை விரகனூர் அருகே எல்.கே.டி., நகரில் வசிக்கும் இவர், செந்தமிழ்க் கல்லூரியில் பி.ஏ., தமிழ் படித்தார். விளையாட்டில் ஆர்வமாக இருந்த இவர், "விளையாட்டாக" போலீஸ் தேர்வுக்கு செல்ல, 1993ல் கான்ஸ்டபிளானார்.

படிப்பில் ஆர்வம் குறையாததால், பி.எட்., எம்.ஏ., எம்.எட்., எம்.பில்., என அடுத்தடுத்து பட்டம் பெற்றார். பின், ஆராய்ச்சி படிப்பிற்கு கருவாக, பெற்றோர் வசித்த மதுரை தேனூரை எடுத்துக் கொண்டார். இவ்வூர் குறித்து இலக்கியங்கள் சொல்வது என்ன, கள்ளழகர் தேனூரில் இருந்து மதுரை ஏ.வி.பாலம் கீழ் ஆற்றில் ஏன் இறங்க வேண்டும், தேனூருக்கும், அழகர் விழாவுக்கும் இருந்த கட்டமைப்பு என தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க, "முனைவர்" பட்டம் கிடைத்தது. அதுவே, அவர் படித்த கல்லூரியில், இன்று உதவி பேராசிரியராக்கி உள்ளது.

"பிஸி"யான போலீஸ் பணியிலும், எப்படி இந்த சாதனையை செய்ய முடிந்தது?

ஆறுமுகம் கூறியதாவது: என்கூட பிறந்தவர்கள் 8 பேர். அப்போது வறுமை பிடியில் இருந்தோம். அந்த கஷ்டத்திலும் பி.ஏ., படித்தேன். பிறகு போலீஸ் பணியில் சேர்ந்தேன். அந்த சம்பளம்தான் அடுத்தடுத்து படிக்க, உதவியாக இருந்தது. தேடுதல் இருந்ததால், சிறு ஓய்வு கிடைத்தாலும், செந்தமிழ்க் கல்லூரிக்கு ஓடிவிடுவேன்.

அங்கு இல்லாத நூல்களே இல்லை. ஏடுகளில் இருந்தும் ஆய்வு மேற்கொண்டேன். படிப்பிற்கு தேவையான 80 சதவீத நூல்கள் அங்கு கிடைத்தன. பேராசிரியர்களும், போலீஸ் அதிகாரிகளும் எனக்கு ஆதரவு தந்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் பணி ஒதுக்கியபோது, எனது ஆராய்ச்சியின் தீவிரம் அதிகரித்தது. அதுவே, படிப்பிற்கும் உதவியாக இருந்தது. தகுதிக்கு ஏற்ப, ஆசிரியராக செல்லலாம் என முடிவு செய்து, 13 கல்லூரிகளில் விண்ணப்பித்தேன்.

ஆனால், "போலீஸ்காரருகிட்டே என்னத்த இருக்க போகுதுனு" யாரும் முக்கியத்துவம் தராத நிலையில், செந்தமிழ்க்கல்லூரி நிர்வாகம் என்னை அரவணைத்து கொண்டது. ஜூன் 9ம் தேதி வந்தால், போலீஸ் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஆனால், நேற்று அப்பணியை ராஜினாமா செய்து விட்டேன், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.