Pages

Monday, June 3, 2013

தலைமை பணியிடங்கள் காலி: தடுமாறும் கல்வித்துறை

கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால் பணிகள் பாதித்துள்ளன.
தமிழகத்தில், 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் வரை காலியாக இருந்த நிலையில், சிவகங்கை, விருதுநகர், நெல்லை உட்பட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களும் (எஸ்.எஸ்.ஏ., திட்டம்) கடந்த வாரம் ஓய்வு பெற்றனர்.

மேலும், மதுரை மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் உட்பட 17 கல்வி அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றனர். இதனால், 35 முதன்மை கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, 6 இணை இயக்குனர்கள் பணியிடங்களும், நூலகம் உட்பட 3 இயக்குனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

வழிநடத்தும் தலைமையிட பணியிடங்கள் காலியானதால், கல்வித் துறை உத்தரவுகளை செயலாக்கம் செய்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் மிக முக்கியமானவை. உத்தரவுகளை செயலாக்கம் செய்வதில் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு.

தற்போது, 14 வகை அரசு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வழிநடத்தும் அதிகாரிகள் இல்லாததால் இப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. கல்வி துறையில் ஒரு மாவட்ட அதிகாரி ஓய்வு பெறும் நிலையில், சில தினங்களிலேயே அந்த பணியிடத்தை நிரப்ப, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.