Pages

Friday, June 21, 2013

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீலனை

தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், இப் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் வாக்கு வங்கியை மனத்தில் கொண்டும் இதற்கான முடிவை அரசு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த வாரம் நடைபெற உள்ள தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவை அரசு எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு, இந்த முடிவை எடுக்கும்பட்சத்தில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தில்லி கல்வித் துறை அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில், "தங்களது ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்' என்றார்.

தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65 ஆக உயர்த்துவதற்கான கோப்பு, அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது' என்றார்.

தில்லி அரசு எடுக்கும் இந்த முடிவால் ஆசிரியர்களின் கணிசமான வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த வலியுறுத்தி நாங்க்லாய்- ஜாட் தொகுதி எம்எல்ஏ பிஜேந்திரா சிங் சுமார் 500 ஆசிரியர்களுடன் முதல்வர் ஷீலா தீட்சித்தை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "2006-ஆம் ஆண்டின் போது ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-இல் இருந்து 62-ஆக உயர்த்த ஷீலா தீட்சித் அனுமதி அளித்தார். தற்போதும், சாதகமான முடிவை அவர் எடுப்பார் என்று நம்புகிறோம்' என்றார்.

"தில்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 லட்சம் பேரில் 10 முதல் 15 சதவீதம் பேர் 61 முதல் 62 வயதுக்கு இடைப்பட்டவர்களாக உள்ளனர்.

அரசு எடுக்கும் நடவடிக்கை மூலம் அவர்கள் பயன்பெறுவார்கள்'

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.