
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99.4 சதவீதமாகவும், சூளைமேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99.6 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் ஏழை மாணவிகள் அதிகம் பயிலும் அரசுப் பள்ளிகளிலும் 99 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதம் உள்ளது.
இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளில் பலர் தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி: ஏழை மாணவிகள் அதிகம் படிக்கும் இந்தப் பள்ளியில், 614 பேர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். அதில் 610 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 436 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் 79 பேரும், கணிதத்தில் 29 பேரும், சமூக அறிவியலில் 23 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் முதலிடம் பெற்ற கவிதா என்ற மாணவியின் 493 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தச்சுத் தொழிலாளியின் மகளான அவர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதே போல டீ மாஸ்டராக பணியாற்றுவரின் மகள் சாம்னா 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த பள்ளியில் தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வாரத்துக்கு ஒருமுறை திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு மாணவிக்கும் தனிக்கவனம் தரப்படுவதுடன், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மாதம் ஒரு முறை நடக்கிறது. இதன் காரணமாகவே தேர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாக அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு: இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு 231 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை 77 ஆகும்.கணிதத்தில் 3 பேரும், சமூக அறிவியலில் 4 பேரும் 100-க்கு 100 எடுத்துள்ளனர்.
இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வில் இந்தப் பள்ளி பெற்றிருக்கும் தேர்ச்சி விகிதம் 99.6.
No comments:
Post a Comment