Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 5, 2013

    தவறான மதிப்பீடு! - Dinamani

    பி.இ. படிப்பில் சேர்வதற்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.)மாணவருக்கான தகுதி மதிப்பெண் குறைந்தபட்சம் 40% ஆக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார்.
    இந்த மேல்முறையீடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அரசியல் அமைப்புகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியாக இருக்குமே தவிர, இந்த மேல்முறையீட்டால் தமிழக அரசுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்காது என்பது, உயர் நீதிமன்றத் தீர்ப்பை படித்த எவருக்கும் நிச்சயமாகப் புரியும்.

    எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் "பிளஸ் டூ' தேர்வில் "தேர்ச்சி பெற்றிருந்தாலே' போதும், அதாவது "35% மதிப்பெண்' பெற்றிருந்தாலே போதும், பி.இ. படிப்பில் சேரலாம் என்பது தமிழத்தில் திமுக ஆட்சியில், அன்றைய உயர் கல்வி அமைச்சராக பொன்முடி இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவு. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும (ஏ.ஐ.சி.டி.இ) விதிமுறைப்படி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை தமிழகத்தில் தளர்த்தப்பட்டது.

    இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியது. அதாவது, ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண், குறைந்தபட்ச அளவு. அதற்கும் மேலாக மதிப்பெண்ணை உயர்த்தி நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது; ஆனால் 40-க்கும் கீழாக மதிப்பெண்ணைக் குறைக்க எந்த வகையிலும் உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் பி.இ. படிப்பில் சேருவதற்காக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஒதுக்கீடு ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகவே இருப்பதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

    2007-08 கல்வியாண்டில் எஸ்.சி., எஸ்.டி.-க்காக ஒதுக்கப்பட்ட பொறியியல் படிப்பு இடங்களில் 10,900 கடைசி வரையிலும் காலியாக இருந்தன. 2008-09-ஆம் கல்வியாண்டில் இது 12,030 ஆக உயர்ந்தது. 2009-10 கல்வியாண்டில் 18,372 ஆக உயர்ந்தது. 2011-12 கல்வியாண்டில் 17,469 ஆக இருந்தது.

    இத்தனை ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தாலும், அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கான இடஒதுக்கீடு முழுமையாகப் பூர்த்தியாகின்றன. 2012-13 கல்வியாண்டில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பி.இ. கலந்தாய்வின் முடிவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும், அனைத்துப் படிப்புகளிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான இடங்கள் அனைத்திலும் மாணவர்கள் சேர்ந்தனர். ஒரே ஒரு பாடப்பிரிவில் எஸ்.சி. இடம் மட்டுமே கடைசி வரை காலியாக இருந்தது. இது முதல் கட்ட கலந்தாய்வின் இறுதி நிலவரம். அதாவது "கட்-ஆஃப்' மதிப்பெண் 160-க்கு உள்ளாகவே இந்த இடங்கள் பூர்த்தியாகிவிட்டன.

    அப்படியானால், வெறும் தேர்ச்சி மட்டுமே போதும் என்று கூறினாலும் இத்தனை ஆயிரம் இடங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சேராமல் இருக்கக் காரணம் என்ன?

    பொறியாளர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் தனியார் கல்லூரியில் சேர்ந்தால், இவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைவு. அதிலும் குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்குச் சலுகை உள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால் கல்விக் கட்டணமே தேவையில்லை. இவர்கள் செலவில்லாமல் படிக்க முடியும். அதனால்தான் இந்த மாணவர்கள், அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதையே விரும்புகிறார்கள்.

    எஸ்.சி., எஸ்.டி.க்கான இடங்கள் ஆயிரக்கணக்கில் தனியார் பொறியியல் கல்லூரிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்குப் பொருளாதாரம்தான் பிரச்னையே தவிர, மதிப்பெண் அல்ல.

    குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக உயர்த்தி நிர்ணயிப்பதால்தான் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர முடியாமல் போகிறது என்பது உண்மையல்ல என்பதையும், தனியார் கல்லூரிகளின் கட்டணம்தான் அவர்களை விரட்டுகிறது என்பதையும் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

    ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரு ஆங்கில நாளேட்டில் முதல் பக்கத்தில் வெளியான செய்தி, ஒரு தலித் மாணவரின் சாதனை குறித்தது. ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த தலித் மாணவர் எல். பொன்னுதுரை, பல இடையூறுகளுடன் தனது பி.இ. படிப்பை முடித்துவிட்டு, தற்போது சிமென்ட் கம்பனியில் வேலை கிடைக்கப்பெற்றுள்ளார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாணவர், ஆதிதிராவிடர் பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பில் 96% மதிப்பெண், பிளஸ் டூ தேர்வில் 93% மதிப்பெண் எடுத்தவர். இருந்தும், சென்னை வந்து கலந்தாய்வில் பங்கேற்கப் பணம் இல்லாத காரணத்தால் ஒரு ஆண்டு வீணாகிப் போனது. ஓட்டலில் வேலை செய்தார். ஆசிரியர்கள் உதவியுடன் பொறியியல் படிப்பில் அடுத்த ஆண்டு சேர்ந்தாலும், தமிழ் வழியில் படித்த அவரை ஆங்கிலம் பயமுறுத்தியதால் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டார். மீண்டும் நண்பர்களின் ஊக்கத்தில் திரும்பிப்போய் படித்த அவருக்கு, இன்று சிமென்ட் ஆலையில் வேலை கிடைத்துள்ளது.

    இவரது வாழ்க்கை உணர்த்துவது இதைத்தான்: அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களை அரசாங்கமே அடையாளம் கண்டு, நிதியுதவி அளித்து கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும். தமிழ் வழியில் பயின்ற அவர்களுக்கு ஆங்கிலத்தில் கொஞ்சம் பயிற்சி கொடுத்து, தன்னம்பிக்கை அளிப்பதும் அரசின் தலையாய கடமை; தகுதி மதிப்பெண் 35% அல்லது 40% என்பதற்காக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதை விடுத்து, தங்கள் தகுதியை நிரூபிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை மேலும் தகுதியுடையவராக்குவதுதான் அரசு மேற்கொள்ள வேண்டிய பணி. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் செய்ய வேண்டிய பணியும் அதுவே!

    No comments: