Pages

Thursday, May 23, 2013

டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை: தமிழக அரசு

"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன.

"தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்" என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.

ஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

2 comments:

  1. Thaguthi madhipen kuraikka thagudhi thervu yedharku!MLA Balakrishnan avargal yedhaenum perumbanmai illadha katchi atchi amaikka othukolvara?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.