Pages

Wednesday, May 29, 2013

வேலை வாய்ப்பு முன்னுரிமை பதிவில் முறைகேடு

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலை வாய்ப்பு முன்னுரிமை பதிவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும், 31ம் தேதி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு பெற, இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் படிப்பு சான்றுகளை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு அலுவலங்களில் பணி நியமனம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.

ஆனால், சில ஆண்டாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கல்வி சான்றுகளை பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போரை ஏமாற்றும் வகையில் பதிவு மூப்பில் பல்வேறு தில்லு முல்லுகள், முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் கூறியதாவது: கிருஷ்ணகிரியை சேர்ந்த கால்ஊனமுற்றவர் ராம்ராஜ். இவரது முன்னுரிமை பதிவு மனநலம் பாதிக்கப்பட்டவர் என மாற்றப்பட்டுள்ளது. கடந்த, 26 ஆண்டாக பராமரிக்கப்பட்டு வரும் இவரது உயர்கல்வி பதிவுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஓசூரை சேர்ந்த தீபா, கால் ஊனமுற்றவர். 2004ம் ஆண்டில் செய்த இவரது பதிவில் இருந்து மாற்றுத்திறனாளி முன்னுரிமையும், உயர்கல்வி பதிவுகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. போச்சம்ப்பள்ளி அருகே பாரூர் சர்தார் என்வரது பதிவு ஹிந்து என மாற்றி பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமையை நீக்கம் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரீனாகுமாரி. இவரது பெயரை ருக்குமணி என மாற்றி கிருஷ்ணகிரி நீதிமன்ற நேர்காணலில் பங்கேற்க முடியாமல் செய்து விட்டனர். ஓசூர் பேரண்டப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமி தேவி (தாழ்த்தப்பட்டோர்). இவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் ஐ.டி.ஐ., படித்துள்ளதாக கூறி இவருக்கு துப்புரவு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற திட்டமிட்ட வகையில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு மற்றும் கல்வி தகுதிகளை திருத்தம் செய்து, வேலைவாய்ப்பு முன்னுரிமை பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்களை நீக்கம் செய்துள்ளனர். இடைத்தரர்கள் மூலம் பணம் கொடுத்தால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முன்னுரிமை பட்டியலில் இடம் பெறலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், "முன்னுரிமை அல்லாதவர்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்கள் பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும், கல்வித்தகுதி மற்றும் முன்னுரிமை தகுதியை உடனடியாக வழங்கிடும் வகையில் பதிவுகளை சீரமைத்திட வேண்டும்" என்ற கோரிக்கை வலியுறுத்தி, 31ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகலம் முன் முற்றுகை போராட்டம், காத்திருக்கும் போராட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினர்.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரியிடம் கேட்டபோது, "அரசு காலி பணியிடங்கள் அனைத்தும் ஒரு பணியிடத்துக்கு, 1:4 என்ற விகிதத்தில், ஐந்து பேரை பதிவு அடிப்படையில் அரசு பணிக்கு பரிந்துரை செய்கிறோம். ஐந்து பேரில் ஒரு மாற்றுத்திறனாளி பெயரை பரிந்துரை செய்கிறோம். வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறோம். வெளிப்படையான நிர்வாக முறை நடக்கிறது. அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளது," என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.