Pages

Monday, May 20, 2013

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் - நாளிதழ் செய்தி

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் கட்டணத்தை தாறுமாறாக வசூலித்து வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தம் இஷ்டம்போல் கட்டணத்தை வசூலித்து வந்தனர். இதையறிந்த அப்போதைய தி.மு.க., அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தசாமி தலைமையில் கமிட்டி அமைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் அதில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தரத்தை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு பள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. தனியார் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் போதுமானதாக இல்லை. எனவே இக்கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என முறையீடு செய்தனர்.

அதன்படி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேல் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை மறு பரிசீலனை செய்து உயர்த்தியது. திருத்தப்பட்ட கட்டணமும் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனியார் பள்ளிகள் தம் இஷ்டம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வு முடிவு தர வரிசையில் கடலூர் மாவட்டம் 31 இடத்தில் உள்ளது. அந்தளவிற்கு அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், கடன் பட்டாலாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் தம் இஷ்டம்போல் கட்டணத்தை "கறந்து" வருகின்றனர். பிளஸ் 2 மாணவனுக்கு சேர்க்கை கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கடந்த பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளிக்கூட பிளஸ் 2 சேர்க்கைக்கு வெறும் 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் தரமற்ற கல்வி கொடுக்கும் பள்ளிகள் எல்லாம் கட்டணத்தை மட்டும் குறைப்பதில்லை.

இன்னும் ஒரு சில பள்ளிகள் கோவிந்தராஜ் கமிட்டி நிர்ணயித்த குறைவான கட்டணத்திற்கும், தற்போது பெறப்படும் சிங்காரவேலு கமிட்டியின் கட்டணத்திற்கும் இடையே உள்ள வித்தியாச கட்டணத்தை 2 ஆண்டுகள் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது ஒரு புறமிருக்க கடலூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்று பிரி.கே.ஜி., க்கு 20 ஆயிரம் ரூபாயும், மீண்டும் முதல் வகுப்பில் சேர்க்கைக்காக 10 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு பள்ளியும் கல்வி என்ற பெயரால் பெற்றோர்களிடம் கடுமையாக பணத்தை கறந்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், வாய்மூடி மவுனம் சாதித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.