Pages

Thursday, May 30, 2013

பிளஸ் 2 மாற்று சான்றிதழ்களில் குளறுபடி; பள்ளி நிர்வாகம் அலட்சியம்

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ், பிழை மற்றும் அடித்தல், திருத்தல்களுடன் வழங்கப் பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 232 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 130 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, கடந்த சில நாட்களாக, மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் நாளில், முதல் பிரிவு மாணவர்களுக்கு (கணித பிரிவு) மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் வழங்கப் பட்டது. இதில், 48 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களில், மேல்நிலை வகுப்பு சேர்க்கை நாளை தவறாக குறிப்பிட்டு, திருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.

அதாவது, பிளஸ்1 வகுப்பில் சேர்ந்த நாளாக, 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அதே ஆண்டு ஜூலை 4ம் தேதி என, குறிப்பிடப்பட்டிருந்தது. சிலரது சான்றிதழில், மையால் அடித்து திருத்தியும், பலரது சான்றிதழில் வட்டமிட்டு திருத்தியும், ஆசிரியர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.

மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில், போலிகளை தவிர்க்க, இச்சான்றிதழ்களில், அடித்தல், திருத்தல்களை தவிர்க்குமாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தலைமையாசிரியர் விடுப்பில் இருந்தால், முதுகலை உதவி தலைமையாசிரியர் பொறுப்பில் இருப்பவரே, சான்றிதழில் கையொப்பம் இடவேண்டும். இதை பின்பற்றாமல், பட்டதாரி தமிழாசிரியரே இப்பணியை செய்துள்ளார்.

சான்றிதழில் உள்ள திருத்தத்தால், குறித்த காலத்திற்குள் கல்லூரியில் சேர இயலுமா என மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர். இதுமட்டு மின்றி, சான்றிதழ் பெற்றவர்களிடம், தலா 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவர் ஒருவர் கூறுகையில், "முக்கிய சான்றிதழ் என்பதையே கவனத்திற்கொள்ளாமல், தவறாக எழுதி திருத்தியுள்ளனர். கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் போது, இதையே காரணமாக கூறி நிராகரித்தால் எங்கள் படிப்பு பாழாகும். இதில், அக்கறை காட்டாதவர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரிடமே, பணம் வசூலிக்க தவறவில்லை," என்றார்.

இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் ரகுராமன் கூறுகையில், "ஏ 1 பிரிவு சான்றிதழில் மட்டுமே தவறு ஏற்பட்டது. அதை திருத்தி வழங்கியுள்ளோம். பள்ளி மேம்பாட்டிற்காக ஊராட்சித் தலைவர் ராஜி, தலைமையாசிரியர் கூறியதால் தான் பணம் வசூலித்தோம்," என்றார்.

1 comment:

  1. அந்த வகையில் தொடக்கப்பள்ளிக் கூடங்கள்தான் பெஸ்ட். 5 பைசாகூட வாங்க மாட்டாங்க. மானம் போகுது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.