Pages

Saturday, May 18, 2013

எஸ்.ஆர்.எம். பல்கலையில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான படிப்புகளில் 11 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும் பல்கலைக்கழக மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 90 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இரட்டை பட்டமும் பெற வகை செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடக்கம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க நாடெங்கும் 26 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 19 இளங்கலை மற்றும் 35 முதுகலைப் படிப்புகளுக்கு சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

தற்போது உலகெங்கும் 47 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் அனைத்துவகை படிப்புகளிலும் சேர்ந்து பயின்று வருகின்றனர். நடப்புக் கல்வி ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை இருமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மொத்த மாணவர்களான 60 ஆயிரம் பேர்களில் வசதியற்றோர், விதவைக் குடும்பத்தினர் மற்றும் போரில் ஊனமுற்ற மற்றும் உயிர் துறந்த ராணுவத்தினர் குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் 6 ஆயிரம் பேர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.14 கோடி உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனர் உதவித்தொகை மற்றும் பல்கலைக்கழக தகுதி படிப்பு உதவித் தொகை ஆகியவை கலந்தாய்வு தொடக்க நாளில் வழங்கப்படும்.

மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இலவசக் கல்வி, தங்குமிடம் வசதியுடன் மாதம்தோறும் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது.

கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வங்கிக் கடனுதவி பெற உதவும் வகையில் சுமார் 10 வங்கிகள் பல்கலைக்கழக வளாகத்தில் பங்கேற்க உள்ளன என்றார் அவர்.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, பதிவாளர் என்.சேதுராமன், மாணவர் சேர்க்கைக்கான இயக்குநர் முத்து சுப்ரமணியம், இயக்குநர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.