Pages

Monday, May 27, 2013

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை (தென்) மண்டலத்தில் உள்ள, 2,338, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலிருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில், 1,47,052 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், 275 பள்ளிகளை சேர்ந்த, 13 ஆயிரத்து 738 மாணவர்கள் மற்றும், 10ஆயிரத்து661 மாணவிகள் என, 24 ஆயிரத்து 399 பேர் தேர்வெழுதினர். இதில் 13 ஆயிரத்து 727 மாணவர்கள், 10 ஆயிரத்து 656 மாணவியர் என, 24 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் 99.92 சதவீதமும், மாணவியர் 99.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது கிரேடு அடிப்படையில், வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. " ஏ 1" முதல் "டி" கிரேடு வரை பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாகின்றனர்.

"இ1, இ2" கிரேடு பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள், இ.ஐ.ஓ.பி., எனும், சிறப்புதேர்வு எழுதி, தேர்வு பெறலாம். இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாடங்களை, எளிதாக கற்பிக்கும் முறை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டை விட, இந்தாண்டு, 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். கடந்தாண்டு, 432 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; இது இந்த ஆண்டு, 213 ஆக குறைந்துள்ளது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, சுதர்சன் ராவ் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.