Pages

Saturday, April 27, 2013

அரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த, புது திட்டம்!

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக பெற்றோர் பலர் குழந்தைகளை தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்த போட்டியை சமாளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் தெரிவிப்பது, பொதுஇடங்களில் பழகும்போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது, உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளை கற்பிப்பது போன்ற பல பயனுள்ள தகவல்கள் தமிழ்-ஆங்கிலம் கலந்து (பை லிங்குவல்) ரேடியோ மூலம் உரையாடல் வடிவில் கற்பிக்கப்பட உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கருத்தாய்வு மையங்களில் (சி.ஆர்.சி.) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இத்திட்டத்துக்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ரேடியோ வழங்கப்பட உள்ளது. ரேடியோ வழங்குவதற்கு முன் இப்பயிற்சிக்காக குழந்தைகள் தயார்ப்படுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், கோவை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “தொடக்கப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஏ.பி.எல்., பயிற்சி முறை வாயிலாக, ஏற்கனவே மாணவர்கள் சிறந்த ஆங்கிலத் திறனும் படைப்பாற்றலும் பெற்று வளர்கின்றனர்.

தற்போது அமல்படுத்தப்பட உள்ள ‘ரேடியோ இங்கிலீஷ்’ பயிற்சித் திட்டமும் வழங்கப்பட்டால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்று விடுவர்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.