Pages

Saturday, April 20, 2013

அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி

காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பெரிய கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நென்மேனியில், ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1964ம் ஆண்டு துவக்கப்பட்டது. பொன் விழா கண்ட இந்த பள்ளியில் தான், இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலோனோர், பாலர் படிப்பை படித்தனர். விவசாயம் மட்டுமே பிரதான தொழில். காலத்தின் மாற்றம், இங்குள்ள பலரை, காரைக்குடிக்கு இடம் பெயர வைத்தது. இங்கு அ,ஆ., கற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை,ஆங்கில வழி பள்ளியில், சேர்த்து வருகின்றனர்.ஆரம்பத்தில் 85 மாணவர்களுடன் இயங்கிய, நென்மேனி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தற்போது இரண்டு மாணவர்களுடன் நான்கு ஆண்டுகளாக, இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு வரை, நதியா, 8, அவரது அண்ணன் மணிகண்டன்,10 பயின்று வந்தனர். தற்போது மணிகண்டன் ஆறாம் வகுப்புக்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். ஒரே மாணவருடன் இயங்க முடியாத நிலையில், இங்கு வேலை பார்க்கும், சமையல் உதவியாளர் அவரது உறவினர் பையனை, பள்ளியில் படிக்க வைப்பதற்காக வளர்த்து வருகிறார். ஒன்றாவது படிக்கும், அவனது பெயரும் மணிகண்டன். புனிதாராணி, விஜயலெட்சுமி என இரு ஆசிரியர்கள், ஒரு சமையல் உதவியாளர் உள்ளனர். இவர்களில் விஜயலெட்சுமி என்ற ஆசிரியர், சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், மாற்றுப்பணிக்காக அவ்வப்போது சென்று விடுவார். நிரந்தரமாக இருப்பது, தலைமை ஆசிரியரான புனிதாராணி மட்டுமே.

இந்த பள்ளியில், 3 "டிவி', ஒரு "டிவிடி' பிளேயர், மற்றும் செயல்வழி கற்றலுக்கான அனைத்து வசதியும் உண்டு. படிக்க மாணவர்கள் தான் இல்லை. வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி, இவ்வூரில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை, இப்பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை.தற்போது படிக்கும்,நதியா என்ற மாணவியும், ஏம்பலை சேர்ந்தவர். தந்தை இல்லாத நிலையில், இப்பள்ளியில் பயின்று வருகிறார். அவரை ஆசிரியர் அதட்டினால், பள்ளிக்கு வருவதில்லை. வீட்டுக்கு தேடி செல்லும் போது, எனக்கு இந்த ஆசிரியரை பிடிக்கவில்லை.வேறு ஆசிரியர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடிப்பாராம். இதனால், இருவரையும் அதட்ட கூட இந்த ஆசிரியர்களால் இயலவில்லை. நான்காம் வகுப்பு படித்து வரும் நதியா, ஆறாம் வகுப்புக்கு, வேறு பள்ளிக்கு சென்றால், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்க வருவார்.நென்மேனிக்கு அருகில் உள்ள பெரிய கொட்டக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில், எட்டு மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். காலத்திற்கு ஏற்ப தொடக்கப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை வலுப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.