Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 5, 2013

    ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி

     
    உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர்.
    அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர்.

    …….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமே, எழுத மறந்தது ஏராளம்.

    இத்தனைபேரும் விழிவிரியப் பார்க்கவும், அளவிற்கதிமாக நேசிக்கவும் என்ன காரணம்?

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சிய ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்றுதான் இந்தப்பள்ளியும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் மௌனமாய் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் நிமிர்ந்து நிற்கின்றது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.

    முதலில் தன்மீதும் அடுத்து பிறர்மீது குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான். தன் சமூகத்தையும் முன்னேற்றுவான். அப்படிப்பட்ட மனிதர்களாகத்தான் தெரிகின்றனர், இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.ஃப்ராங்ளின் ஆகியோர்.

    தங்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு உன்னதமான கல்வி அனுபவத்தை தந்துவிடவேண்டுமென வேட்கை கொண்ட ஆசிரியர் ஃப்ராங்ளின் தலைமையாசிரியை உதவியுடன் பள்ளியில் இருக்கும் இரண்டு வருப்பறையில் ஒன்றை முதலில் புதுப்பிக்க முடிவெடுக்கிறார்.

    ஆசிரியர்கள் இருவரும் தங்கள் பணத்தில் பெரிய தொகையை ஒன்றினை அளித்து அந்த வேள்வியைத் தொடங்குகின்றனர். வளரும் தலைமுறைக்காகத் தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் சுமார் ரு.2.5 லட்சம் செலவில் ஒரு வகுப்பறை முற்றிலும் நவீனப்படுத்தப்படுகிறது. 2011ம் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பேரதிசயம் காத்திருந்தது. அதுவரைக் கண்டிராத ஒரு புதுச்சூழலுக்குள் தங்களைப் புகுத்திக் கொள்கின்றனர்.

    பள்ளி குறித்த செய்திகள் இணையம், வார இதழ்கள், தொலைக்காட்சி வாயிலாக உலகத்திற்குத் ஓரளவு தெரியவருகின்றது. இதைக் கேள்விப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் அவர்கள் வருகை தந்ததோடு, இதே போன்று மாவட்டத்தில் விரிவாக்கம் செய்ய, முதற்கட்டமாக ஆனைகட்டி, பொள்ளாச்சி, தொண்டாமுத்துார் உட்பட நான்கு பள்ளிகளை சீரமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்.

    பள்ளியின் ஒரு வகுப்பறையை மட்டும் செம்மைப் படுத்தியதோடு நின்றுவிடாமல், மேலும் பொதுமக்கள் நிதியோடும், ஆட்சியர் வாயிலாகவும், ”அனைவருக்கும் கல்வி திட்டம்” வாயிலாகவும் நிதி பெற்று அடுத்தடுத்த பணிகளை இராமம்பாளையம் பள்ளியில் மேற்கொள்கின்றனர்.

    பள்ளி சுற்றுச்சுவர் ரூ.4,50,000 செலவில் கட்டப்படுகிறது (இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ.3,08,000, மீதி நன்கொடை). அடுத்ததாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ. 5,00,000 நிதிபெற்று அதோடு மேலும் நிதிதிரட்டி ரூ.6,25,000 மதிப்பில் பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகக் கட்டிடம் 11 கனிணிகளோடு அமைக்கப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.3,00,000 மதிப்பில் இரண்டாவது வகுப்பறை கிரானைட் தளம், குளிர்சாதனக் கருவி என அற்புதமாக வடிவமைக்கின்றனர்.

    இப்போது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி…

    • 11 கனிணிகள் கொண்ட ஆய்வகத்துடன், இரண்டு வகுப்பறைகள்
    • குளிர்சாதனம் பொருத்தப்பட்ட (A/c) வகுப்பறை
    • டைல்ஸ் / கிரானைட் தரை
    • தரமான பச்சை வண்ணப்பலகை
    • வகுப்பறைக்குள் குடிநீர் குழாய்
    • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
    • வெந்நீர், சாதா நீருக்கு என தனித்தனி குழாய்கள்
    • தெர்மோகூல் கூரை
    • மின்விசிறிகள்
    • உயர்தர நவீன விளக்குகள்
    • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
    • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
    • வேதியியல் உபகரணங்கள்
    • கணித ஆய்வக உபகரணங்கள்
    • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்
    • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
    • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி
    • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை
    • அனைவருக்கும் தரமான சீருடை
    • காலுறைகளுடன் கூடிய காலணி
    • முதலுதவிப்பெட்டி
    • தீயணைப்புக்கருவி
    • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
    • LCD புரஜெக்ட்டர் ……………………….. ஆகியவற்றோடு உலகத்திற்கே ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியாக நிமிர்ந்து நிற்கின்றது

    சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளான பின்பும் இந்தியா முழுக்க கல்வி ஒரு கடைமையாக மட்டுமே பாவிக்கப்பட்டு வரும் சூழலில், இது எப்படி சாத்தியமானது, இதெல்லாம் ஓர் நாளில் வந்ததா?

    இதையெல்லாம் செய்ய வைத்தது ஒற்றை மனிதனின் ஓங்கிய கனவு. ஒரே ஒரு மனிதன், தன்சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவினாலும், சரஸ்வதி டீச்சரின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே சாத்தியமானது.

    ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன காலம்தானே இது. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர்படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத்தேவை மாற்றம் என்பதே.

    இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 27 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளியில் இன்று 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் தனியார் ஆங்கிலவழிக் கல்வி பள்ளியில் பயின்ற மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

    காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர்கள், தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டைதீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளனர்.

    ஆசிரியர்கள் இருவரும் இணைந்து கல்வித் துறையில் இப்படியும் புரட்சி செய்யமுடியும் என தங்கள் அர்பணிப்புக் கொடையால் ஒரு எடுத்துக்காட்டை உலகத்திற்குப் படைத்துவிட்டனர். தான் செய்யும் பணியை உயர்வாய், உயிராய் நேசித்ததன் விளைவே இது.

    மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தொடங்கியவேள்வியில் கிட்டத்தட்ட சாதித்துவிட்டனர்.

    திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த கிராமத் தலைவரிடம் எப்படி தங்களால் ஒத்துழைப்பும், நிதியும் அளிக்க முடிந்தது எனக் கேட்டால் அவரின் ஒரே வார்த்தை “ஆசிரியர்கள் மேல் தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.

    வெறுமென ஒரு சாதாரண ஆசிரியர்களாக மட்டும் அந்தப் பள்ளியில் செயல்படாமல் குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கின்றனர். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் ஆசிரியர் ஃப்ராங்ளின் மீது ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.

    “பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார் ஃப்ராங்ளின்.

    புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் இரண்டு வருடங்களாக புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டால், “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால்,அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றது” என்கிறார். பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

    பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதையும் திறம்படத் துவங்கியுள்ளனர்.

    மாணவ - மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை,ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஓய்வுபெறும் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியை சரஸ்வதி அவர்களும், இந்தத் திட்டங்களின் பிதாமகனான ஃப்ராங்களின் அவர்களுக்கும் சமகாலச் சமுதாயத்தின்முன் உதாரணங்களாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கு ஏதாவது செய்திடவேண்டும் எனும் வேட்கை எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்புதான். “சம்பளத்திற்கு உழைப்போம்” என்ற மனோபாவம் நீக்கமற படிந்து போன சமூகத்தில் தங்களை முழுதும் ஈடுபடுத்தி, எவரொருவரும் செய்திடாத அதிசயத்தை, அற்புதத்தை சப்தமில்லாமல் செய்திட்ட இந்த ஆசிரியர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளப் படுத்தப்பட வேண்டியவர்கள். எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களைச் சரிவர பாராட்டுவதும், இவர்களின் தியாகத்தை, உழைப்பை அங்கீகரிப்பதும் அரசுகளின், சமூக அமைப்புகளின், ஊடகங்களின் மிக முக்கியக் கடமை. இவர்கள் செய்த பணியை தங்கள் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டியது சக ஆசிரியர்கள், சக மனிதர்களின் தலையாயக் கடமை.

    ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவது மட்டும்தான் புரட்சியா? அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் மாற்றத்தை நிகழ்த்துவதும் புரட்சிதான்!

    இந்தக் கல்விப் புரட்சியாளர்களைக் கொண்டாடுவோம், முன்மாதிரியா எடுத்துக்கொள்வோம், மனதார வாழ்த்துவோம்.
     

    8 comments:

    sankareswari said...

    V.Good. Keep it up. GOVT. must try to provide the above said facility to all schools. Then parents will reach the govt. schools.

    My heartfelt thanks and wishes to தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.ஃப்ராங்ளின்.

    Anonymous said...

    IT IS A MARVELLOUS IN THE EDUCATION DEPARTMENT.HATS OF FRANKLIN & SARASWATHI.WISH YOU THE BEST IN YOUR CAREER.

    pazhanivelu said...

    Good job..... All teachers in tamilnadu will follow them to improve their schools.

    Anonymous said...

    My Heartiest thanks and wishes to Mr.Franklin And Mrs.Saraswathy

    DURAI.THIYAGARAJAN NATTAR said...

    Govt should honour & extent their job term period

    Anonymous said...

    good school. we are school try to more than this.thank u for ur information.L.Chokkalingam

    NC PANNAL said...

    super sir.good dream.

    Anonymous said...

    HELLO SIR, YOU ARE MY ROLL MODEL, - VASU, PALACODE.