Pages

Monday, April 22, 2013

மொபைல் போனில் பாடங்கள் படிக்க வசதி அறிமுகம் செய்கிறது திறந்தநிலை பல்கலை

எந்தவொரு இடத்தில் இருந்தும், மாணவர்கள் பாடங்களை படிக்கும் வகையில், முதன்முறையாக, மொபைல் போனில் பாடங்கள் படிக்கும் வசதியை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
அறிமுகப்படுத்தவுள்ளது.பள்ளி, கல்லூரி படிப்பை தொடர முடியாதோர், கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 2002ல் துவங்கப்பட்டது. இங்கு, தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், இளங்கலை, முதுகலை மற்றும் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், நான்கு லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் மட்டுமே ஆசிரியராக உள்ளதால், மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொபைல் போனில் வேலைக்கு செல்வோரில், பெரும்பாலானோர், இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதால், மொபைல் போனில், மாணவர்கள் பாடங்கள் படிப்பதற்கு வழிவகை செய்யும் திட்டத்தை, செயல்படுத்த நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பல்கலைக்கழக பாடங்கள் அடங்கிய மென்பொருளை, மாணவர்கள் இலவசமாக இணைய தளத்திலிருந்து, மொபைல் போனுக்கு, "பதிவிறக்கம்' செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, "அன்ட்ராய்ட்' மற்றும் "ஸ்மார்ட்' மொபைல்போன்களில் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். உதாரணத்திற்கு, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாட புத்தகத்தை, குறைந்த சேமிப்பு இடத்தில், பதிவிறக்கம் செய்து விட முடிகிறது என்பதால், இந்த வசதி, மாணவர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேட்கும் வசதி புத்தகங்களை படித்து கொண்டிருக்கும் மாணவர், குறிப்பிட்ட பக்கத்தில் நிறுத்தி விட நேரிட்டாலும், சில நாட்களுக்கு பின், அந்த பக்கத்திலிருந்து தொடர முடியும். இந்த மென்பொருளில், கூடுதல் வசதியாக, பாடங்கள் வாசிக்க, நாம் கேட்கும் வசதியுள்ளது.பாடப்புத்தகங்களை மொபைல் போன் வழியாக மற்ற மாணவர்களின் மொபைல்போனுக்கும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியதாவது: மொபைல் போன் மூலம், கல்வியை கொண்டு சென்றால், அதை, மாணவர்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதால், துறை வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மொபைல்போனில், மாணவர்களுக்கு கல்வியை கொண்டு செல்ல, வழிமுறைகளை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.