Pages

Thursday, April 11, 2013

தரமான ஆசிரியர்கள் பற்றாக்குறை - காரணம் என்ன?

தனியார் மற்றும் பொதுத்துறைகளில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் பெருகிவரும் இந்தியாவில், தரமான ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெரிய சிக்கலாக தொடர்ந்து வருகிறது. பல புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, திறமையான ஆசிரியர்களை எப்படி கையாள்வது என்றே தெரிவதில்லை.
பல கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பற்றாக்குறை என்பது, தேர்வு கமிட்டியின் அலட்சியம் மற்றும் நிராகரித்தல் மனநிலையினாலேயே ஏற்படுகிறது.

ஒரு மத்திய பல்கலைக்கழகம், ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, நேர்முகத் தேர்வுக்கான நபர்களை தேர்வு செய்யும் முன்பாகவே, ஆசிரியர் பணியமர்த்துதலை அறிவித்தது. இதிலிருந்து நிலைமையைப் புரிந்து கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வுக்கு முன்னதாக...

பணிக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், கடுமையான செயல்பாடு பின்பற்றப்படுகிறது. சராசரியாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை, அதற்காக செலவிடப்படுகிறது. தேர்வுக் கமிட்டியின் முன்பாக ஆஜராவதற்கென எந்தவித முறைப்படுத்தப்பட்ட நடைமுறையும் இல்லை. சிலர், தேர்வுக் கமிட்டியின் அழைப்பிற்காக 6 முதல் 8 மணிநேரங்கள் வரை காத்திருக்கிறார்கள். இதனால், சோர்வு மற்றும் பசி உள்ளிட்ட நெருக்கடிகளும், ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு ஏற்படுகின்றன.

நேர்முகத்தேர்வு

பேராசிரியர்களை தேர்வு செய்ய நடத்தப்படும் நேர்முகத் தேர்வானது, பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் முறையாக நடைபெறுவதில்லை என்பதே, பலரின் புகாராக உள்ளது. தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் பலர், தங்களது பணியில் கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படாமல், தங்களின் கைப்பேசிகளிலேயே கவனம் செலுத்துகின்றனர். மேலும், தொடர்பற்ற ஏதேனும் ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு முயற்சிசெய்து பதிலளிப்பவரை மட்டப்படுத்தி கேலி செய்கின்றனர்.

சில சமயங்களில், தேர்வுக் கமிட்டியின் தலைவராக இருப்பவரே, தனது கைப்பேசி அழைப்புக்காக இடையில் எழுந்து சென்று, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வந்த குறிப்பிட்ட நபர் முடிந்து வெளியே செல்லும்வரை, மறுபடியும் உள்ளே வருவதில்லை. இதுபோன்ற ஏராளமான குளறுபடிகள், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் நடப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு பிறகு...

ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட பலரும் ஒரேமாதிரி அனுபவங்களையே பகிர்ந்து கொள்கின்றனர். தொடர்புடைய பாடங்கள் சம்பந்தமாக கேள்விகள் கேட்காதது, போதுமான நேரம் ஒதுக்காதது உள்ளிட்டவை முக்கியமானவை. தேர்வு கமிட்டியின் பிரதான நோக்கம், ஒருவரை நிராகரிப்பதிலேயே இருக்கிறது. மேலும், மட்டம் தட்டுதலும் பரவலாக நடப்பதாக அனுபவஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்களிடம் என்ன இருக்கிறது?

தனியார் பல்கலைகள், குறிப்பாக, நிகர்நிலை அளவில் இருக்கும் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அங்கே ஆசிரியராக சேரும் ஒருவர், எந்தமாதிரியான பொருளாதார நன்மைகளை, கல்வி நிறுவனத்திற்கு கொண்டு வருவார் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர் ஏதேனும் நன்கொடை தருகிறாரா? அல்லது தன் மூலமாக பல மாணவர்களை அக்கல்வி நிறுவனத்தில் சேர்த்து விடுகிறாரா? என்பதை வைத்து அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் அவருக்கான இடம் உறுதிசெய்யப்படுகிறது. அவரின் முறையான கல்வித்தகுதி மற்றும் திறமைகள் போன்றவற்றுக்கு இரண்டாம் பட்ச முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது. எனவே, பசை உள்ள இடத்தில் வாய்ப்பும் இருக்கும் என்பதற்கு, இந்த இடமும் விதிவிலக்கல்ல என்ற நிலையே உள்ளது.

உண்மை நிலவரம்

ஆசிரியப் பணியில் சேர ஆவலுடன் இருப்பவர்கள், தங்களின் கல்வித் தகுதிகளின்பால் நம்பிக்கை வைத்து, தேர்வு கமிட்டியில் இருப்பவர்களைப் பற்றி பெரியளவில் மனதில் மரியாதையை ஏற்றிக் கொண்டு, நேர்முகத் தேர்வுக்கு வருகிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. பொதுவாக, Presentation என்ற செயல்பாடு, ஒரு ஆசிரியரை பணிக்கு எடுப்பதற்கு முன்னதாக, கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. ஆனால், பல கல்வி நிறுவனங்கள் அந்த நடைமுறையைக்கூட பின்பற்றுவதில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிலர் வேதனையுடன் கூறுவதாவது  இந்த நாட்டில் படித்தவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் மதிப்பில்லை. தேர்வு கமிட்டி உறுப்பினர்கள், நேர்முகத் தேர்வுக்கு வந்திருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், தங்களின் கைப்பேசியிலேயே பிசியாக இருக்கிறார்கள். படித்தவர்களே வளமாக கருதப்படுகிறார்கள். ஆனால், படிக்காதவர்கள், விசுவாசமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், ஒருநாள், அந்த விசுவாசமானவர்களே, வளமானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதை நாம் புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம். இதுதான் இந்தியா! என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டமான தேர்வுக் கமிட்டியிடமிருந்து பெறப்படும் சில எதிர்மறை மதிப்பீடுகள்

* உங்களின் அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது.

* நீங்கள் எந்தத் தொழிலுக்கும் தகுயற்றவர்கள்.

* நீங்கள், எங்களின் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

* உங்களின் ஆய்வுகள் எப்படி புகழ்பெற்ற ஜர்னல்களில் வெளிவந்தது?

* நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே செல்லலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.