Pages

Thursday, April 18, 2013

மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க களமிறங்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடைவிடுமுறை தொடங்கும் முன்பே அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு சார்ந்த ஆரம்பபள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் உத்தமபாளையத்தில் மட்டும் 6 பள்ளிகள் செயல்படுகின்றன.
இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமான அரசுபள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஆங்கில மெட்ரிக்பள்ளிகளின் மோகம் காரணமாக நடுத்தரமான பெற்றோர்கள் பிள்ளைகளை மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
அரசு பள்ளிகள் தரமான கல்வியை போதித்தாலும் மெட்ரிக் மோகம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்கிறது. மெட்ரிக்பள்ளிகளின் கவர்ச்சியான விளம்பரம் காரணமாக பெற்றோர் தாமாகவே பிள்ளைகளை சேர்க்கின்றனர். எனவே அரசு ஆரம்ப பள்ளிகள், மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையில் பிரச்னை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போதே ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி வீடுவீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடு, வீடாக செல்லும் ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் உள்ள நன்மைகள் பற்றியும், குடும்பத்தில் படிக்கின்ற வயதில் உள்ள பருவ வயது மாணவர்கள் பற்றிய பட்டியலையும் சேகரித்து வருகின்றனர்.
இதேபோல் அரசுபள்ளிகளில் சேர்த்தால் அரசு வழங்கும் சலுகைகள், கல்வி உதவித்தொகை, வாரத்தில் 5நாள் முட்டை, விதவிதமான சத்துணவு என்று பல்வேறு விதமான சலுகைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்து கூறி வருகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயிலும்போது தரமான கல்வியை கற்கலாம். தமிழக அரசு மாணவர்கள் நலன் கருதி பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. பத்தாம்வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தனியார்களுக்கு போட்டியாக அதிகமதிப்பெண்களை அரசு பள்ளி மாணவர்கள் எடுக்கின்றனர். இதனை நன்கு புரிந்து அடிப்படைகல்வியை அரசு பள்ளிகளில் அளித்த பெற்றோர் முன்வரவேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.