Pages

Thursday, April 18, 2013

பொறியியல் படிப்பு - விடைகாண வேண்டிய கேள்விகள்

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரை அழைத்து, நீ எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டால், ஒன்று டாக்டர் அல்லது இன்ஜினியர் அல்லது ஐ.ஏ.எஸ்., ஆகிய மூன்றில் ஏதேனுமொன்றை சொல்வார். இந்த மூன்றை தாண்டிதான் வேறு அம்சங்களை பெரும்பாலான மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.
நமது சமூகத்தின் சிந்தனை தரநிலை அப்படித்தான் உள்ளது என்று நாம் நொந்து கொண்டாலும், வேறு சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஒருவர் ஆக வேண்டுமெனில், அவர் கடக்க வேண்டிய தொலைவு அதிகம். கடினமான முயற்சியின் மூலமே, ஒருவர் அந்த நிலையை அடைய முடியும் எனும்போது, பலரும் தங்களின் பாதையை மாற்றிக்கொள்ளவே நினைக்கின்றனர். மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, இந்திய அளவில், அதற்கான இடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் போட்டியோ, பல மடங்கு அதிகம். மேலும், மருத்துவப் படிப்பை பொறுத்தவரை, முதுநிலை படிப்பையும் சேர்த்து முடித்தால்தான், வேலைவாய்ப்பு மற்றும் வருமான சந்தையில் நல்ல முக்கியத்துவம் கிடைக்கும். இதன் காரணமாக, மருத்துவப் படிப்பிற்கான ஆவலையும் பலர் கைவிட்டு விடுகின்றனர். எனவே, பொறியியல் படிப்புதான், பலருக்கும் எளிதான மற்றும் இறுதியான இலக்காக மாறுகிறது.

உலகமயமாக்கல் சூழலில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், நிறைய மனித வளங்களை, தொழில்நுட்ப துறைகளுக்காக உருவாக்கும் முயற்சிகள் பல்லாண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. அதன்பொருட்டுதான், இன்ஜினியரிங் கல்விக்கு, அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு.

பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருப்பது, மாணவர்களின் இன்ஜினியரிங் கனவை எளிதாக்கியுள்ளது. ஆனால், ஒரு பெரிய பிரச்சினை என்னவெனில், பொறியியல் படிக்க வேண்டும் என நினைக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு, அதைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையே இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். தனக்கு உண்மையிலேயே அத்துறையில் ஆர்வமுள்ளதா? தன்னால் அத்துறையில் சாதிக்க முடியுமா? உண்மையில் தனது திறமை அத்துறையில்தான் அடங்கியுள்ளதா? அத்துறை தொடர்பாக தனக்கு தெளிவான பார்வை இருக்கிறதா? தன்னால் இயந்திரங்ளை இயக்குவதில் ஆர்வம் காட்ட முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு அவர்களால் விடைகாண முடியவில்லை.

தன்னை சுற்றியுள்ளவர்களின் வற்புறுத்தல் மற்றும் சமூகப் போக்கு போன்ற காரணங்களாலேயே பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்கின்றன. பொறியியல் துறையில் ஈடுபட, ஒருவருக்கு தேவையான தகுதிகளும், திறமைகளும் இருக்கிறதா என்பதை கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. எம்.பி.டி.ஐ.,(MBTI) மற்றும் ஹாலண்ட் கோட்ஸ்(Holland codes) போன்ற மதிப்பீட்டு தேர்வுகள், பொறியியல் துறையில் ஈடுபட ஒருவருக்கு தேவையான தகுதியும், திறமையும் இருக்கிறதா என்பதை அறிய உதவுகின்றன.

பொறியியல் படிப்பில் சேரும் முன்பாக, நாம் விடைகாண வேண்டிய பல கேள்விகள் உள்ளன. எந்தவிதமான நுழைவுத்தேர்வை எழுத வேண்டும், நல்ல கல்லூரியை தேர்வு செய்வது எப்படி, எப்படி தயார் செய்து கொள்வது, என்னென்ன பொறியியல் துறைகள் இருக்கின்றன, எந்த கல்லூரிகள் சிறந்தவை, பொறியியல் துறைகளுக்கு இடையிலான வேறுபாடுகள், எனக்கு ஏற்ற துறை எது உள்ளிட்ட கேள்விகளே அவை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.