Pages

Tuesday, April 30, 2013

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தியது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் என, இரு பிரிவினர் குறித்தும், கணக்கு எடுக்கப்பட்டது.

இதில், 51 ஆயிரத்து, 173 பேர், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முழுமையான தகவல்களை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது.

"பள்ளி செல்லாததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது" என, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:பள்ளி செல்லாத குழந்தைகளில், பிற மாநிலங்களில் இருந்து, இங்கு குடிபெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர்களும் இருக்கின்றனர். குழந்தைகள் ஒவ்வொருவரின் பெயர், அவர்களுடைய புகைப்படங்கள், குடும்ப பின்னணி, சமூக, பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளோம்.

அனைவரையும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதற்கு, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்கள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்துவிட்டால், பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்படும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.