Pages

Thursday, April 25, 2013

பொறியியல் கலந்தாய்வு: தினமும் 4,500 பேரை அழைக்கத் திட்டம்

"பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஒரு நாளைக்கு, 4,000 முதல், 4,500 மாணவர்களை, கலந்தாய்வுக்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம்" என, பொறியியல் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
அவர், கூறியதாவது: நாடு முழுவதும், பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு வகுப்புகள், ஆகஸ்ட், 1ம் தேதி ஆரம்பிக்க வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில், ஆகஸ்ட், 1ம் தேதி, முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணையை, வடிவமைத்து உள்ளோம்.

கடந்த ஆண்டு, 45 நாட்கள் வரை, கலந்தாய்வு நடந்தது. நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக, 3,500 மாணவர்களை, கலந்தாய்வுக்கு அழைத்தோம். இந்த ஆண்டு, கலந்தாய்வு நாட்களை, 40 நாட்களாக குறைத்துள்ளோம். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி உள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு, 4,000 மாணவர்கள் முதல், 4,500 மாணவர்கள் வரை, கலந்தாய்வுக்கு அழைப்போம். கலந்தாய்வு துவங்கும் நேரம் மற்றும் கடைசி சுற்று நேரம் ஆகியவற்றில், எந்த மாற்றமும் கிடையாது. முதல் சுற்று கலந்தாய்வு, காலை, 7:30 மணிக்கு துவங்கும். இறுதிச்சுற்று, மாலை 6:00 மணிக்கு நடக்கும்.

சென்னையில் மட்டும் தான்...: கலந்தாய்வு, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டுமே நடக்கும். இதில் பங்கேற்பதற்காக, மாநிலத்தின், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள், அண்ணா பல்கலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு, பல்கலை வளாகத்தில், கழிப்பிட வசதி மற்றும் குளியல் அறை வசதி போன்றவற்றை செய்து தருகிறோம்.

ஆனால், தங்குவதற்கான வசதியை செய்துதர முடியாத நிலை உள்ளது. ஏனெனில், பெற்றோர்களுடன் சேர்ந்து, சம்பந்தமில்லாதவர்களும், பல்கலை வளாகத்தில் நுழைந்து விடலாம். கலந்தாய்வு நடக்கும்போது, பல்கலை வளாகத்தில், கல்லூரி நடந்து கொண்டிருக்கும். எனவே, அனைவரையும், தங்குவதற்கு அனுமதித்தால், பிரச்னைகள் வரலாம். எனவே, தங்குவதற்கான வசதியை, பெற்றோர்கள், ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு, ரெய்மண்ட் உதிரியராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.