Pages

Sunday, March 31, 2013

உலகசாதனையை முறியடித்த மாற்றுத்திறனாளி மாணவர் : உதவிகளை நாடி காத்திருப்பு

எறும்புக்கும் வாழ்க்கையுள்ள இந்த உலகில் சாதிக்க ... ஊனம் ஒரு தடையே அல்ல... தன்னம்பிக்கையை இழந்தவர்கள் ஜெயிப்பது இல்லை...  ஜெயிப்பவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது இல்லை... பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரரின் சாதனையை முறியடித்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்...
சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த இந்த மாணவரின் பெயர் மாரியப்பன். சிறுவயதில் விபத்து ஒன்றில் இவரது வலது கால் பாதிக்கப்பட்டது. ஆனாலும், உயரம் தாண்டுதலில் அசாத்திய திறமை கொண்டவர். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் உயரம் தாண்டுதலில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். கடந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டெலானா 1.74 மீட்டர்தான் தாண்டியிருந்தார். சோதனைகள் பல கடந்து சாதனை படைத்த மாரியப்பனின் வாழ்க்கையோ வறுமை நிரம்பியது.

செங்கல் சூளையில் வேலை செய்து 70 ரூபாய் தினக்கூலி பெற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் மாரியப்பனின் தாய் சரோஜா. சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தனது மகனுக்கு தகுதி இருந்தும் வறுமை தடையாய் இருப்பதை எண்ணி வேதனையில் உழல்கிறார் இவர்.

பொருளாதார சிக்கல் காரணமாகவே கடந்த ஆண்டு பாராலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை மாரியப்பனுக்கு ஏற்பட்டதாக கூறும் வடகம்பட்டி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், தற்போதும் அதே சிக்கல் நீடிப்பதால், ஃபிரான்சில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியிலும் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருப்பதாக கூறுகிறார்.

தேசிய அளவிலான போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபித்த மாணவர் மாரியப்பன், சர்வதேச போட்டிகளிலும் அதனை நிரூபிக்க முனைப்பாக இருக்கிறார்.

அதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கித் தருமானால், மாரியப்பனால் ஃப்ரான்சில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்த வாய்ப்புக்காகவும் உதவிக்காகவும் காத்திருக்கிறார் மாரியப்பன் நம்பிக்கையுடன்.

1 comment:

  1. இப்படி செய்திகளை தரும்போது.. சம்மந்தப்பட்டவரின் தொலைபேசி எண்ணைத் தரலாமே

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.