Pages

Monday, March 4, 2013

கோவையில் ஆண்களுக்கான அரசு பி.எட்.,கல்லூரி: கோரிக்கை நிறைவேறுமா?

சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்துத்துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் கோவையில், ஆண்களுக்கென அரசு பி.எட்., கல்லூரி இல்லை. இது, கோவையின் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
கல்வியை ஊக்குவிக்க மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப், சைக்கிள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதேசமயம், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது.

கல்வியியல் கல்லூரிகளை பொருத்தவரை, சென்னையில் இரண்டும் (சைதாப்பேட்டை மற்றும் லேடி வில்லிங்டன்), புதுக்கோட்டை, வேலூர், தஞ்சை ஒரத்தநாடு, கோவை, சேலம் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் ஏழு கல்வியியல் கல்லூரிகள் மாநிலத்தில் உள்ளன. இதுதவிர, எட்டு அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 672 சுயநிதி கல்லூரிகளும் அடங்கும்.

கோவையில் ஒரு மகளிர் கல்வியியல் கல்லூரியும், ஆண்களுக்கென ஒரு அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரியும், சில சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. டவுன்ஹால் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 125 மாணவியர் படித்து வருகின்றனர்.

ஆனால், ஆண்களுக்கென அரசு பி.எட்., கல்லூரி இல்லாதது, கோவையில் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. பொருளாதார பிரச்னையால் சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் பி.எட்., கல்லூரிகளில் படிக்க முடியாமல் மாணவர்களின் கல்வியும் தடைபடுகிறது.

தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம், குடும்ப வறுமை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களின் ஆசிரியர் கனவு கைவிடப்படுகிறது. மாணவியருக்கென அரசு பி.எட்., கல்லூரி செயல்படுவதைப்போல், மாணவர்களுக்கென அரசு பி.எட்., கல்லூரியை கோவையில் துவங்குவதன் மூலம், மாணவர்களின் ஆசிரியர் கனவு நனவாகும்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்மணி கூறியதாவது: நாளுக்கு நாள் பள்ளியில் தேர்ச்சிபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களுக்கென அரசு பி.எட்., கல்லூரிகள் துவங்குவது அவசியம். அரசு புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்காமல் இருப்பது, சுயநிதி பி.எட்., கல்லூரிகளுக்கு மறைமுகமாக வழங்கும் தொடர் ஆதரவின் நிலைபாடாக கருதுகிறோம்.

15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அரசு கல்லூரிகளை தவிர, இதுவரை புதிதாக வேறு கல்லூரி எதுவும் வங்கப்படவில்லை. அண்மையில் மாநிலம் முழுவதும் ஒன்பது அரசு கலை அறிவியில் கல்லூரிகள் துவக்க அரசு அறிவித்ததை போல், புதிய பி.எட்., கல்லூரிகளையும் அரசு துவக்க முன்வர வேண்டும். இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.