Pages

Sunday, March 17, 2013

6 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தனியார் பள்ளிகள் அவரவர் இஷ்டத்துக்கு வெவ்வேறு நாட்களில் தேர்வுகளை நடத்தி வந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதனால் தமிழகம் முழுவதும் எல்லா பள்ளியிலும் ஒரே நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். கோடை விடுமுறையும் அதற்கேற்றவாறு விடப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.

தற்போது பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்று முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடக்கிறது.

6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது.

9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு 3-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி முடிகிறது. மதியம் 1.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகிறது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளும் இந்த தேர்வு அட்டவணையை பின்பற்றித் தான் தேர்வை நடத்த வேண்டும்.

தேர்வுக்கான வினாத்தாள் தனியார் பள்ளிகள் அவர்களே தயாரித்துக் கொள்ளலாம் எனவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வினாத்தாள்களை விரும்பும் தனியார் பள்ளிகள் வேண்டுமானால் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

1 comment:

  1. நடுநிலைப் பள்ளிகளுக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரே கால அட்டவணையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.