Pages

Sunday, March 24, 2013

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு



விருதுநகரில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வைகைச்செல்வன் ஆய்வு செய்தார்.
பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது. எனவே விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் அதற்கான முதல் கட்ட பணிகளை அமைச்சர் வைகைசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதோடு, இடையூறு ஏதும் இல்லாமல் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். அதனால், இம்மையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு, வருகிற 27 தேதியோடு தேர்வு முடிகிறது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், டம்மி எண் போடும் பணிக்காகவும் பல்வேறு மையங்களுக்கு விடைத்தாள்கள்  பிரித்தனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி முதல் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி, தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியிலும், அதேபோல் அறிவியல் தொடர்பான பாடங்களுக்கு மாற்று எண் போடும் பணி ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 800 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு ஆசிரியர்கள் சிறப்பாக பணிகள் செய்வதற்காகவும், திருத்தம் இல்லாமல் இருப்பதற்காகவும் திருத்தம் இல்லாமல் திருத்தும் ஆண்டாக கடைபிடிக்கும் வகையில் ஆசிரியர்கள் உறுதிமொழியேற்று இப்பணியை தொடங்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உடன் ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.பகவதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பழனியாண்டி, சுப்பிரமணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.