Pages

Saturday, March 2, 2013

நம்பிக்கை விதைத்த பிளஸ் 2 மாணவ, மாணவியர்

விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன்.
தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த இவர், மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன் அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர்.

தனசேகரனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்தன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகரன், "பிளஸ் 2 தேர்வை எழுத முடியாது" என, டாக்டர்கள் கை விரித்தனர்.

தேர்வு எழுத வேண்டும், என்ற உறுதியுடன் தனசேகரன் இருந்தார். உடல் நிலைமையை விளக்கி, அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டது. தனசேகரன் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டு, ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நேற்று காலை, அவரை தேர்வறைக்கு அழைத்துச் சென்றனர்.

பேசக்கூட முடியாத நிலையில் இருந்த தனசேகரன், சிரமப்பட்டு பதில் சொல்ல, ஆசிரியர் மகேஸ்வரன் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடித்த பின், அவர் கூறுகையில், "சிகிச்சை பெற்றுக் கொண்டே அனைத்து தேர்வுகளையும் எழுத முடியும்" என, மன உறுதியுடன் தெரிவித்தார்.

இதேபோல் செஞ்சியில் கண் பார்வையற்ற மாணவி, ஆசிரியை உதவியுடன் பிளஸ் 2 தேர்வெழுதினார். மாற்று திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செயின்ட் மிக்கேல் மேல்நிலை பள்ளியில் இயங்கி வருகிறது.

இதில் பிளஸ் 2 படிக்கும் கண் பார்வையில்லாத அனிதா என்ற மாணவி நேற்று பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதினார். இவர் தேர்வு எழுத தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

கேள்வித்தாளில் இருந்த கேள்விகளுக்கு இவர் சொன்ன பதிலை, இதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியை எழுதினர். இவர் தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்பள்ளியில் விழுப்புரம் டி.இ.ஓ., மல்லிகா ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.