Pages

Monday, March 11, 2013

பிளஸ் 2 முதன்மைத் தேர்வுகளை கண்காணிக்க 4,000 பேர்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களில், 43 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர்.
இதையடுத்து, இன்று முதல் துவங்கும் முதன்மை தேர்வுகளில் மாணவர்களின் முறைகேடுகளை கண்டறிய, பறக்கும் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில், அறை கண்காணிப்பாளர் மீது, விசாரணை நடத்தவும், அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், கடந்த, 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, வரும், 27ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம், 5,769 பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 4,538 மாணவ மாணவியர், 2,020 மையங்களில் தேர்வெழுதுகின்றனர்; இதில், 48,788 தனித்தேர்வர்கள். தேர்வில் முறைகேடுகளை கட்டுப்படுத்த, ஆள் மாறாட்டம் செய்வோர், ஆயுள் முழுவதும் தேர்வு எழுத முடியாது என, அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்து, தண்டனையை கடுமையாக்கியுள்ளது.

இருப்பினும், மற்றவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை மாற்றி எழுதுதல், "பிட்" எழுதி செல்லுதல் உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில்,இன்று முதல், வரும், 27ம் தேதி வரை, செய்முறை மற்றும் செய்முறை இல்லா முக்கிய தேர்வுகள் நடப்பதால், முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மாநிலம் முழுவதும், மாணவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், முறைகேடுகளை கண்டறியவும், 4,000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்களுக்கும் போதுமான அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.

பறக்கும் படை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மொழித் தேர்விலும் கூட, பிட் அடித்து மாணவர்கள் பிடிபட்டுள்ள நிலையில், முக்கிய தேர்வுகளில், அதிக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்த பறக்கும்படையினருக்கும், அறை கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறை கண்காணிப்பாளர் அல்லது பறக்கும் படையினரால், முறைகேடு கண்டறியும் பட்சத்தில், அறை கண்காணிப்பாளர் மீது, விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பறக்கும் படையினரிடம், முறைகேடு செய்யும் மாணவர்கள் பிடிபட்டால், அறை கண்காணிப்பாளர் மீதும், நடவடிக்கை பாயும் என்பதால், சோதனையை தீவிரப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.