Pages

Sunday, March 17, 2013

நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு: 1,300 அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்

பிளஸ் 2 தேர்வில், நாமக்கல் தனியார் பள்ளியில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, 1,300 அறை கண்காணிப்பாளர்கள், அதிரடியாக மாற்றப்பட்டனர்.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த, 1ம் தேதி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 62 மையங்களில்,31, 277 பேர்,பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். தேர்வுப் பணியில், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என, 2,300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த, 11ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில், நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை, அட்டையில் எழுதி, மாணவர்களுக்கு காட்டி, முறைகேடு செய்தது, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம், ஆய்வின்போது, கண்டுபிடித்தார்.

இதை தொடர்ந்து, அப்பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அனைத்து தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்டங்களை சேர்ந்த, 150 ஆசிரியர்கள், கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் நாட்களில், முக்கியத்துவம் வாய்ந்த வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய தேர்வு நடக்கிறது. அதில், எந்த முறைகேடும் நடக்கக்கூடாது என்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகள், தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்காக, மூன்றாவது முறையாக, முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாவட்டம் முழுவதும், அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய, 1,300 பேரை, வேறு மையங்களுக்கு மாற்றி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அந்தந்த பள்ளிகளுக்கு, இ-மெயில் மூலம், தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் பேசியதாவது: முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

தனியார் பள்ளிக்குச் செல்லும் முதன்மை கண்காணிப்பாளர்கள், பள்ளியின் நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் உதவியாளர், அரசு பள்ளியை சேர்ந்தவராக இருக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.

இரண்டு அறைகளை கண்காணிக்க, ஒரு பறக்கும் படை உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். அறை கண்காணிப்பாளராக, தேர்வு அறைக்கு அனுப்பும்போது, அவர், அதே பாடத்தை சேர்ந்த முதுகலை ஆசிரியராக இருக்கக் கூடாது; அதை, கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.