Pages

Saturday, March 30, 2013

ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்

பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத் தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இம்மாதம் 27ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், 28ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பி.முட்லூர் மையத்தில், தமிழ் இரண்டாள் தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும், பி.முட்லூர் தபால் அலுவலகம் மூலம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாடிமுத்து நகர் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதே போன்று, மாவட்டத்தின் பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்பட்ட, 91 விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம், "ரயில்வே மெயில் சர்வீஸ்" (ஆர்.எம்.எஸ்.,) அலுவலகத்தில் இருந்து, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு, 2:30 மணிக்கு ஏற்றினர்.

இதை, "மெயில் கார்டுகள்" கதிர்வேல், பழனிவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று காலை, திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் விடைத்தாள் பார்சல்களை இறக்கிய போது, விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்ட, 91 பண்டல்களில் ஒன்று குறைந்தது.

விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள், ரயில் பாதையில் சென்று பார்த்த போது, விருத்தாசலம் ஜங்ஷனில் இருந்து திருச்சி மார்க்கத்தில், 300 மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியார்பேட்டை அருகே, விடைத்தாள் பண்டல் ஒன்று முற்றிலும் சேதமடைந்து கிடந்தது.

விருத்தாசலம் ஜங்ஷனில் இருந்து ரயில் புறப்பட்ட சற்று நேரத்தில், விடைத்தாள் பார்சல் கீழே விழுந்துள்ளது. இதை ஊழியர்கள் கவனிக்காததால், அதைத் தொடர்ந்து, சென்னை சென்ற ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் விடைத்தாள் மூட்டை மீது ஏறிச் சென்றதில், விடைத்தாள்கள் முற்றிலுமாக சேதமடைந்து, குப்பை போல் காணப்பட்டது. அதை ஆர்.எம்.எஸ்., மற்றும் ரயில்வே ஊழியர்கள் சேகரித்தனர்.

சேகரிக்க முடியாத நிலையில் இருந்த பேப்பர்களை ஒரே இடத்தில் குவித்து தீயிட்டு எரித்தனர். விடைத்தாள் பண்டல், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்த தகவலை அறிந்து, திருச்சி கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் சங்கர், நேற்று மதியம், 12:00 மணிக்கு விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும், கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி, விருத்தாசலத்திற்கு விரைந்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.