Pages

Monday, March 25, 2013

விடைத்தாள் நகல் பெறும் வசதி: 10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்ப்பு

"பிளஸ் 2 பொதுத் தேர்வை போல், பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான விடைத்தாள் நகல்களும் வழங்க தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை, பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயிக்கின்றன. பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறையும் போது, எதிர்பார்க்கும் பள்ளி, பாடப் பிரிவுகளை பிளஸ் 2விற்காக தேர்வு செய்ய முடிவதில்லை. மேலும், தபால், எல்.ஐ.சி., போன்ற துறைகளில், உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கும் "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியின்போது பிளஸ் 2 தேர்வில் ஏற்படுவது போன்ற "மனித தவறுகள்", பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தலின் போதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று, மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் நவநீதிகிருஷ்ணன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:

பி.எட்., ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தற்போது நடத்தப்படும் தகுதி தேர்வில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, "வெயிட்டேஜ்" மார்க் கொடுக்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் குறைவால், பிளஸ் 2வில் விருப்பமான பாடங்களை தேர்வு செய்ய முடியாமலும் போகலாம்.

விடைத்தாள் நகல் கிடைக்கும் பட்சத்தில், மறுமதிப்பீடு செய்து, மதிப்பெண்களை அதிகரிக்க மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். தேர்வுதுறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.