அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் நாமக்கல் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் முன்னேற்பாடு கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறியதற்காக திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் ஒரே நாளில் அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட பள்ளிகளின் தேவை குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் முன்னேற்பாட்டுக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில், பள்ளிகளின் கட்டடங்கள், தளவாடங்கள், ஆய்வகங்கள், கணினி உபகரணங்கள், ஆசிரியர் தேவைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் முன்னேற்பாட்டுக்கான கூட்டம் ஜனவரி 7-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உதவித் திட்ட அலுவலர் தலைமையில் 6 பேர் குழு பங்கேற்றது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்தும் உதவித் திட்ட அலுவலர் அல்லிமுத்து தலைமையில் 6 பேர் குழுவினர் கலந்து கொண்டனர்.
முதல் இரு நாள்கள் கூட்டத்தில் பங்கேற்ற அல்லிமுத்து, 9-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். பின்னர், 10-ஆம் தேதி முதல் அனைத்து நாள்களும் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.
9-ஆம் தேதி எந்தவிதத் தகவலும் அளிக்காமல், கூட்டத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக அல்லிமுத்து மீது நடவடிக்கை எடுக்க மாநில திட்ட இயக்குநர் முகமது அஸ்லாம் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கு.தேவராஜன், உதவித் திட்ட அலுவலர் அல்லிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தில் நேரில் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தினார்.
அதன்படி, சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் முன்னிலையில் அல்லிமுத்து செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார்.
அப்போது, ஜனவரி 9-ஆம் தேதி காலை முதல் மாலை வரை கூட்டத்தில் பங்கேற்றதாகவும், கூட்டம் முடிவதற்கு சற்று முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறி மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அவர் தன்னிலை விளக்கம் அளித்ததுடன், அதற்கான ஆதாரங்களையும் அளித்தாராம்.
விரிவான விசாரணைக்குப் பிறகு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தேவராஜன், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன், புதன்கிழமை பணியில் சேரவும் உத்தரவிட்டிருப்பதாக அல்லிமுத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.