Pages

Wednesday, February 20, 2013

பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தங்களைத் தகுந்த முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விஷயம் பிள்ளைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும்.
இரவில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு, புரதச்சத்துமிக்க உணவுகளையும், சின்ன சின்னதாக இடைவெளிவிட்டு விதவிதமான பழங்களையும் படித்துக்கொண்டே சாப்பிடும் படியாக வெட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளின் மனநம்பிக்கை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த நேரத்தில் மிக அவசியம்.

மாரத்தான் எனப்படும் ஒரு நெடு ஓட்டத்தின் கடைசிக்கட்டம் இது. மாணவர்கள் தங்கள் சக்தியின் எல்லைக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் இதை கவனத்தில் கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டியது மிக மிக முக்கியம். சிரமப்பட்டு படிக்கும் பிள்ளைகள், அவ்வவ்போது மன அழுத்தத்தை நீக்கும் விதமாக சிறிது நேரம் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், கோபப்படாமல் விட்டுக் கொடுங்கள். உங்களால் இயலுமானால் கேரம் போன்ற விளையாட்டுகளை, நீங்களும் அவர்களோடு சேர்ந்து விளையாடலாம். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களோடு மனம்விட்டு பேசுங்கள். அவர்களின் குறிக்கோள்களை மறைமுகமாக ஞாபகப்படுத்துங்கள்.

வாழ்க்கையில் விருப்பப்பட்டு கஷ்டப்பட்டவர்களின் வெற்றிப்பாதையை முன் உதாரணமாகக் காட்டுங்கள். அது உங்களின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். எக்காரணம் கொண்டும் மற்றக் குழந்தைகளின் தன்னார்வத்தையோ, திறமையையோ பட்டியல் இடாதீர்கள். குற்றம் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டிய தருணம் இது. இன்னும் சொல்லப்போனால், தேர்வு முடிந்த பின்னான திட்டமிடல்களைக் கூட குழந்தைகளோடு மேலோட்டமாக கலந்தாலோசிக்கலாம். ‘இந்த நெடும் பயணத்தின் முடிவில் மகிழ்ச்சியும், வெற்றியும் காத்திருக்கின்றது‘ என்று புரிந்துகொள்ளும் மாணவர்கள் புத்துணர்வுடன் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவார்கள்.

இனி என்ன? பதற்றமே இல்லாமல் தங்கள் பிள்ளைகளுடன், பெற்றோர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாமே!

-டாக்டர் உமா

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.