Pages

Monday, February 25, 2013

பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் முறைகேடு?

பி.டி.ஏ., எனப்படும், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், பெரும் அளவிற்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது. முறைகேடுகளை மறைப்பதற்காகவே, ஆண்டுக்கு, இருமுறை நடத்த வேண்டிய, பொதுக்குழுகூட்டத்தை கூட்டுவதில்லை என, கூறப்படுகிறது.
சங்கங்களுக்கான சட்டத்தின்படி, 1964ல், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டது. பெற்றோர்-ஆசிரியர் இடையே, நல்லுறவை ஏற்படுத்துவது, கல்விப் பணியில் ஈடுபடுவது, பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக, மாநில அளவில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

வருவாய் அதிகம்: பள்ளிக்கல்வித் துறையின் மேற்பார்வையில், இந்த அமைப்பு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பிற்கு, பள்ளிகள், புத்தகங்கள் விற்பனை மூலமாக, பல லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது. வருவாய்-செலவு கணக்கு விவரங்களை, முறையாகபராமரிப்பது கிடையாது எனவும், பி.டி.ஏ., நிதியில், முறைகேடு நடப்பதாகவும், துறைவட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆண்டுக்கு இருமுறை, பொதுக்குழுவை கூட்டி,உறுப்பினர்கள் முன், அமைப்பின், வருவாய்-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், முந்தைய ஆட்சி காலத்திலேயே, சரியாக பொதுக்குழு கூடவில்லை; ஒரே ஒருமுறை மட்டும், பொதுக்குழு கூடியது; அதன்பின், கடந்த, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, பொதுக்குழு கூடவில்லை என, முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பதவி காலாவதி: மாவட்டத்திற்கு, நான்கு உறுப்பினர்கள் வீதம், 32 மாவட்டங்களுக்கு, 128 உறுப்பினர்கள், அரசு சார்பில், ஐந்து உறுப்பினர்கள், பி.டி.ஏ., தலைவராக இருக்கும், பள்ளிக்கல்வி அமைச்சர், 10 உறுப்பினர்களையும், பரிந்துரை செய்து, நியமனம் செய்ய வேண்டும். உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள்தான். அதன்பின், புதிய உறுப்பினர்களை தேர்வுசெய்ய வேண்டும். ஏற்கனவேஇருந்த உறுப்பினர்களின் பதவிக்காலம், காலாவதி ஆகி, பல ஆண்டுகள் ஆகிறது.

புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவோ, பொதுக்குழுவை கூட்டவோ, இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும், அக்கறை காட்டாதது ஏன் என, முன்னாள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், பொதுக்குழு கூட்டத்தை, முறையாக நடத்தவும், பி.டி.ஏ., முன்வராததற்கு, அதில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள்தான் காரணம் எனவும், அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அரசின், பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், பி.டி.ஏ.,வில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பெற்று, பணி நியமனம் செய்கின்றனர்; இதுவும் முறையாக நடப்பது இல்லை. அதிகார வரம்பில் இருப்பவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை, பி.டி.ஏ.,வில் சேர்த்துவிடுகின்றனர் என்ற புகாரும் உள்ளது.

பி.டி.ஏ., பொருளாளராக இருப்பவர், கணக்காளர் பணியையும் கவனித்து வருகிறார். விதிமுறைப்படி, இது தவறு என்றும், பி.டி.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேரம் எங்க இருக்குது? பி.டி.ஏ.,வில், முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் கூறியதாவது: பணி நியமனம், நிர்வாகம், கலந்தாய்வு, தினமும் பல்வேறுகூட்டங்கள் என, இதிலேயே நேரம் கரைந்துவிடுகிறது. இதில், பி.டி.ஏ.,வில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க நேரம் இல்லை.

அங்கு, பணிபுரியும் ஒருவரே, தன் மகனை, தினக்கூலி அடிப்படையில், பணி நியமனம் செய்த விவகாரம் தெரிந்ததும், உடனடிநடவடிக்கை எடுத்து, சம்பந்தபட்டவரை, பணியில் இருந்து நிறுத்திவிட்டோம்.

மேலும், பி.டி.ஏ.,வில் நடக்கும், பணி நியமனங்களை முறைப்படுத்தவும், நிர்வாகத்தை உன்னிப்பாக கவனிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணிகளையும், ஒரு மாதத்தில் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.